EMI விலக்கு – இது ஒரு சலுகையில்லை…


கொரோனா பரவலினால் பொருளாதார ரீதியாகப் பலரும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் ரிசர்வ் பேங்க் கடன் EMI-யிலிருந்து மூன்று மாதங்கள் விலக்கு அளிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

மேலோட்டமாக பார்த்தால், இது பொது மக்களுக்கு மிகவும் உபயோகமான ஒன்றாகத் தோன்றும்.  ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் வங்கிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழிமுறையினை பின்பற்றுவது மக்களைப் பெரிதும் குழப்பமடையச் செய்துள்ளது.

இந்த மூன்று மாத தடை தேவைப்படும் வாடிக்கையாளர் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வங்கிக்கு இதனைத் தெரியப்படுத்த வேண்டும்.  தவறும் பட்சத்தில், அந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் வழக்கம் போலவே கடன் தொகை பிடித்தம் செய்யப்படும்.  ஒருவேளை கணக்கில் பணம் இல்லாத பட்சத்தில் கடன் செலுத்தாமைக்கான வட்டி எப்போதும் போலவே கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். இதனைத் தவிர்க்க வாடிக்கையாளர் விட்டுப்போன இந்த மூன்று தவணைகளையும் கடன் திருப்பி செலுத்தும் காலத்திற்குள் செலுத்தி விட வேண்டும்.  தாமதிக்கும் பட்சத்தில் கூட்டுவட்டி வசூல் உறுதி.

பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கீட்டின்படி, உங்களின் வீட்டுக்கடன் ரூ. 30 லட்சம் என்றும், கடன் செலுத்தும் காலம் மீதம் 15 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் விலக்கு கேட்ட மூன்று மாதங்களுக்கான கூட்டுவட்டி விகிதம் ரூ. 2.34 லட்சங்களாகும்.  இது கிட்டத்தட்ட எட்டு மாதாந்திர தவணைக்கு ஈடானதாகும்.

அதேபோல, தனிநபர் கடன் ரூ. 6 லட்சம், கடன் தவணை காலம் மீதம் 54 மாதங்கள் எனில், கூட்டுவட்டி ரூ. 19,000/- என்று கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும்.  இது உங்களின் 1.5 மாதாந்திர தவணைக்குச் சமமான தொகையாகும்.

 

இந்த விலக்கினை நீங்கள் கேட்டுப் பெறாத பட்சத்தில், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இல்லையெனில் கண்டிப்பாக அபராத தொகை வசூலிக்கப்படும்.  அப்படி ஒருவேளை நீங்கள் கேட்டுப் பெற்றாலும், கடன் தவணைக்காலத்திற்குள் எவ்வளவு சீக்கிரம் திருப்பி செலுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செலுத்திவிடுவது அனாவசியமான கூட்டுவட்டி சுமையிலிருந்து தப்பிக்க ஏதுவானதாக இருக்கும்.  இல்லையெனில் இந்த விலக்கினை பெறுவதில் நேரடியாக எந்த பலனையும் பெறப்போவதில்லை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள்.

இது இந்த கொரோனாவை விட கொடியதாக இருக்கின்றது.

– லட்சுமி பிரியா