மேலும் ஒரு விலகல்: பிரதமரின் ஆலோசனைக் குழுவில் இருந்து சுர்ஜித் பல்லா..

பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான சுர்ஜித் பல்லா பிரதமர் நரேந்தர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து இன்று விலகியுள்ளார்

பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் அமைப்பில் விவேக் தேப்ராய், பொருளாதார நிபுணர்கள் ரத்தின் ராய், ஆஷிமா கோயல், ஷமிகா ரவி, சுர்ஜித் பல்லா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தார்கள். இந்த நிலையில், காரணம் எதையும் கூறாமல் திடீரென பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இருந்து விலகுவதாக   சுர்ஜித் பல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த  பதிவில் “ பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து நான் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன்” என்று  தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் நேற்று திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “மத்திய பாஜக அரசின் நெருக்கடிகளால்தான் அவர் பதவி விலகினார்” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்த முக்கிய உறுப்பினர், பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.