துபாய்

க்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண் தீயில் சிக்கிய இந்திய ஓட்டுனரை காப்பாற்றி உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மன் நகரை சேர்ந்தவர் ஜாவகர் சயிப் அல் குமைத்தி என்னும் 22 வயதுப் பெண்.  இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தோழியை சந்தித்து விட்டு அஜ்மன் திரும்பிக் கொண்டிருந்தார்.  காரை ஓட்டி வந்த ஜாவகர் உடன் அவர் தோழி ஒருவரும் பயணம் செய்து வந்தார்.

வரும் வழியில் இரண்டு லாரிகள் மோதிக் கொண்டு தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்தன.   அதில் ஒரு ஓட்டுனரான ஹர்கிரித் சிங் இந்திய நாட்டை சேர்ந்தவர்.  அவர் தீயில் சிக்கி உடலெங்கும் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.  வலியால் தன்னை காப்பாற்றுமாறு கதறிக் கொண்டிருந்த அவரை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை.

ஜாவகர் தன்னுடன் வந்திருந்த தோழி அணிந்திருந்த மேல் அங்கியை கழற்றி தருமாறு வாங்கிக் கொண்டு வேகமாக  சென்று ஹர்கிரித் சிங் மீது தனது தோழியின் அங்கியை போர்த்தி தீயை அணைத்தார்.  இந்த துணிகர சம்பவத்தை கண்ட மற்றவர்கள் அவரை பாராட்டினர்.  அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஹர்கிரித் சிங்கையும் மற்றொரு லாரியின் ஓட்டுனரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு ஹர்கிரீத் சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40% தீக்காயம் அடைந்த அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துணிச்சலுடன், சமயோசிதமாக செயல் பட்டு ஹர்கிரீத் சிங் உயிரைக் காத்த ஹாவகருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உடனே விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.  அவரது துணிகர செயலுக்காக விரைவில் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஜாவகர், “பலர் விபத்து நடந்த இடத்தில் இருந்தாலும் தீ எரிவதைக் கண்டு பயந்து ஹர்கிரீத்தை காப்பாற்ற முயலவில்லை.   ஆனால் எனக்கு மனம் தாங்கவில்லை.  அதனால் தான் அவரை உடனடியாக காப்பாற்ற முயன்றேன்.  அவருக்கு என் ஆறுதல் வார்த்தைகளால் தைரியமும் அளித்தேன்.  எனக்கு ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது.  இது போல ஒரு உயிரைக் காப்பாற்றும் தைரியத்தையும் சக்தியையும் எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.  எனக்கு கிடைத்த எல்லா புகழையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.