வேலைவாய்ப்பு பெறும் திறன் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….ஆய்வு அறிக்கையில் தகவல்

டில்லி:

படித்து முடித்து கல்லூரிகளில் இருந்து வெளியேறும் புதியவர்களில் வேலைவாய்ப்பு  பெறும்  திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. 2014ம் ஆண்டில் 33 சதவீதம் என்று இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 45.60 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று இந்திய திறன் அறிக்கை 2018ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்ஜினியரிங், பி.பார்ம், எம்சிஏ போன்ற துறைகளில் இந்த வளர்ச்சி காணப்படுகிறது. பொதுவான பாடப்பிரிவுகளை விட தொழில் சார்ந்த பாடத்திட்ட கல்லூரிகள் வேலைவாய்ப்பு திறன் சார்ந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது. செயல்முறை விளக்கம், தொழிற்சாலை பயிற்சி போன்றவை மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எம்பிஏ பாடத்திட்டம் அதிக கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தரமான மாணவர்களை உருவாக்க இந்த துறை கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டன.

இந்த ஆய்வறிக்கை தயாரிக்கும் பணியில் ஹெச்ஆர் சொலுயுஷன்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான பிபுள் ஸ்ட்ராங், டேலன்ட் அசெஸ்மென்ட் பர்ம் வீபாக்ஸ், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்டது. இதற்கு பியசர்ஸன், ஐநா மேம்பாட்டு திட்டம், ஏஐசிடிஇ, ஏஐயு மற்றும் இதர மாநில அரசுகள் உதவி புரிந்துள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 200 பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு திறன் தேர்வு முடிவுகளை கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிபுள் ஸ்ட்ராங் சிஇஓ பங்கஜ் பன்சாய் கூறுகையில், ‘‘கல்வி நிறுவனங்கள் தரப்பில் வேலைவாய்ப்பு திறன் அதிகரித்திருப்பது நல்ல விஷயம். அதேபேல் தொழில் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க முனைப்புடன் உள்ளன. கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையே இந்த உறுதியை ஏற்படுத்த அதிக சிரமங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சரியான முடிவாகவே இருக்கும்’’ என்றார்.

வீபாக்ஸ் சிஇஓ நிர்மல் சிங் கூறுகையில், ‘‘திறன் மேம்பாட்டுக்கு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் முடிவு தான் தற்போது வெளிவந்துள்ளது’’ என்றார்.