போலி சான்றிதழ் கொடுத்து 11 ஆண்டுகள் அரசு பணி செய்த ஊழியர்! கோவையில் பரபரப்பு

கோவை:
போலி சான்றிதழ் கொடுத்து நீர்வளத்துறையில் சேர்ந்து 11 ஆண்டுகளாக  பணியாற்றி வந்த அரசு ஊழியர், கைதுக்கு பயந்து தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி சான்றிதழ் மூலம் தமிழகத்தில் ஏராளமானோர் அரசு பணிகள் பெற்றுள்ளனர். குறிப்பாக கல்வித்துறையில் ஏராளமானோர் பணியாற்றி வருவதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்து முடிவுகளை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்த நிலையில், மற்ற அரசு துறைகளிலும் போலி சான்றிதழ் மூலம் ஏராளமானோர் பணி நியமனம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில், அரசு ஊழியர்களின் படிப்பு சான்றிதழ்கள் உள்பட அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை பொதுப்பணித் துறையில் நீர்வள ஆதாரப் பிரிவில் இளநிலை உதவி யாளராக பணியாற்றுபவர் கிருஷ்ண குமார் என்பவர் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் பெற்றது தெரிய வந்தது. அவர்மீது புகார் பதியப்பட்ட நிலையில் கிருஷ்ணகுமார் தலைமறை வாகி உள்ளார்.

கிருஷ்ணகுமாரின்  தந்தை பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர். அவர் பணியின் போது மரணம் அடைந்ததால் கருணை அடிப்படையில் கிருஷ்ணகுமாருக்கு வேலை கிடைத்தது. அதன்படி கடந்த  2007-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக ஈரோட்டில் பணியில் சேர்ந்தார். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு கோவைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கிருஷ்ண குமார் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்த அதிகாரி கள், அவர் வழங்கிய 10வது வகுப்பு சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், கிருஷ்ணகுர், பணிக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நீர்வள ஆதாரப்பிரிவு  சார்பாக கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் மீது புகார் பதிவு செய்துள்ள போலீசார், 11 ஆண்டுகளாக போலி சான்றிதழ் மூலம் பணி ஆணை பெற்று பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர். அவர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்பட  3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.