பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் : அசாம் அரசு

கௌகாத்தி

பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் அரசு சட்டம் இயற்றி உள்ளது.

சமீபகாலமாக பலர் தங்கள் பெற்றோர்களை கவனிப்பதில்லை என்னும் புகார் எழுந்து வருகிறது.   உச்சநீதிமன்றம் தங்களை கவனிக்காத மகனுக்கு அளித்த சொத்துக்களை பெற்றோர்கள் திரும்பப் பெறலாம் என தீர்ப்பளித்தது.    இது குறித்து சமூக ஆர்வலர்கள் பெற்றோருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றி உள்ளது.  இது குறித்து அசாம் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அரசு பெற்றோரைக் காக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  அதன்படி அரசு ஊழியர்கள் அனைவரும் பெற்றோரை கவனிக்க வேண்டும்.  அத்துடன் ஊனமுற்ற தங்கள் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறும் அரசு ஊழியர்களின் பெற்றோர்கள் இது குறித்து அரசிடம் முறையிட்டால் அந்த ஊழியரின் மொத்த ஊதியத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்பட்டு அந்த பிடித்தத் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும்.   அதே போல ஊனமுற்ற குழந்தைகளை பராமரிக்கவில்லை எனில் 15% பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.

இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்த சட்டம் மேலும் விரிவாக்கப்பட உள்ளது.  இந்த சட்டத்தில் மாநிலத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைக்கப்பட உள்ளனர்.  அதன் பிறகு அசாமில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.