ஊழியர்களின் பயணப்படிக்கு வருமான வரி விலக்கு

டில்லி

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் பயணப்படிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வருமான வரி விதிகளில் பல திருத்தங்கள் அறிவித்துள்ளன.  இந்த திருத்தத்தின் படி ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு வரி கிடையாது.  ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்துக்கு 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வருமானத்துக்கு 10%, ரூ.7.5 லட்சம் வருமானத்துக்கு 15% என மாற்றப்பட்டுள்ளது.

மேலும் ரு.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வருமானத்துக்கு 20%, ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை வருமானத்துக்கு 25% எனவும் அதற்கு மேல் உள்ளோருக்கு 30% எனவும் மாற்றப்பட்டுள்ளது.  இன்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் இது குறித்து மேலும் சில விளக்கங்கள் வெளியிட்டுள்ளது.

அந்த விளக்கத்தின்படி ஊழியருக்கு அளிக்கப்படும் பயணப்படிகளுக்கு புது விதிகளின் படி வரு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த பயணப்படி, அலுவலக பணி குறித்த பயணம், இடமாற்றம் குறித்த பயணம்,  வேறு இடங்களில் பணி புரிய அனுப்பும் போது செய்யும் பயணம் ஆகியவற்றுக்கான படிகள் ஆகும்.

அத்துடன் பயணத்தின் போது அளிக்கப்படும் இலவச உணவு அல்லது மது இல்லாத பானம் ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விலக்கு கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பார்வை இழந்தோர், செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் இழந்தோர், ஊனமுற்றோர் ஆகியோர் தங்களது மொத்த வருமானத்தில் மாதம் ரூ.320 வரை பயணப்படியாகக் கருதி வரி விலக்கு பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.