விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு 3 சதவிகிதமாக உயர்வு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கூறினார்.

சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு வீரர்கள் சார்பில் முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சுதந்திர தின உரையின்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் 2 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தற்காக இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சருக்கு கராத்தே, வில்வித்தை போன்ற அனைத்து விளையாட்டு அமைப்புகள் சார்பில், சாகசங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல்வர் மாணவர்களுடன் சேர்ந்து கூடைப்பந்து விளையாடி அசத்தினார்.

பின்னர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய முதல்வர், கல்வியும் விளையாட்டும் இரு கண்களைப் போன்றது என்று கூறி,. விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக கூறினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக  அறிவித்தார்.

இதற்கு விளையாட்டு வீரர்கள் கரகோசம் எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.

விழாவின்போது,  தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வென்ற நான்காயிரத் துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பரிசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், கருப்பண்ணன், பாஸ்கரன், ராஜலட்சுமி, வளர்மதி, சரோஜா உள்பட அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் என  ஏராளமானோர் பங்கேற்றனர்.