Random image

வேலையில்லா திண்டாட்டம்: ரெயில்வே கேங் மேன் வேலைக்கு முதுகலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பம்

டில்லி:

ரெயில்வே கேங் மேன் வேலைக்கு முதுகலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

ரெயில்வே தேர்வு வாரியம் சார்பில் வரும் 17ம் தேதி 62 ஆயிரத்து 907 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது. முன்பு ‘குரூப் டி’ என்று அழைக்கப்பட்ட இந்த பணியிடம் தற்போது ‘லெவள் 1’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதற்கு 1.9 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதாவது சராசரியாக ஒரு பணிக்கு 302 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.

இது ரெயில்வேயில் கேங்மேன், கேட்மேன், பாயின்ட்ஸ் மேன், உதவியாளர், போர்டர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வாகும். இதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி என்பது 10ம் வகுப்பு. அல்லது ஐடிஐ. அல்லது தேசிய அப்ரண்டிஸ்ஷிப் சான்றிதழ் போன்றவை முடித்திருந்தால் போதுமானது. ஆனால், இந்த முறை பெரும்பான்மையாக இளங்கலை, முதுகலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ரெயில்வே தேர்வு வாரியம் 1.27 லட்சம் பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் 2.35 கோடி பேர் கலந்துகொண்டனர். இதிலும் பெரும்பான்மையானர்கள் அதிக கல்வி தகுதி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலை ஏற்பட்டிருப்பதற்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தகுதியான மக்களுக்கு உரிய வேலை இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்த வாக்குறுதி வேலைவாய்ப்பு உருவாக்குதலாகும். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றார். ஆனால், 2014ம் ஆண்டுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தற்போது வரை வெளியிடப்படவில்லை.