இப்போதைய கர்நாடக களேபரங்களுக்கு முக்கிய காரணம், மெஜாரிட்டி
என்ற விஷயம் மட்டுமல்ல..ஆளுநரின் அதிகாரம் என்ற ஒற்றை விஷயத்தை எப்படி அணுகுவது என்று ஆளாளுக்கு தென்பட்ட வழிகளும்தான்.

பெருமையுடன் சொன்னால், நமது அரசியல் சாசனம் ‘அவ்வளவு’ தெளிவானது.. அலச அலச வாய்விட்டு சிரிக்கலாம், நோயேவிட்டுப்போகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை ஆளுநரின் அறிக்கை பெற்று குடியரசு தலைவர் கலைக்கலாம். அரசியல் சாசனம் 356வது பிரிவின் கீழ் இது சாத்தியம். ஆளுநர் ஒத்துவராவிட்டால்? அதே பிரிவில், ஆளுநர் அறிக்கை அல்லது ‘வேறுவகையில்’ என்று ஒரு வார்த்தை வரும்.

அந்த ‘வேறுவகையில்’ என்ற ஒற்ற வார்த்தையை வைத்து மாநில அரசுக்கு மங்களா சாசனம் பாடிகுடியரசு தலைவர் ஆட்சியை அமர்த்திவிடலாம். அரசியல் சாசனத்தின்இந்த ஓட்டையை வைத்து பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.
அரசியல் சாசனத்தின் மகிமைகளை பறைசாற்றும் வகையில் வருகின்றனவற்றில் இன்னும் கேலிக்கூத்தானது, மாநிலத்தில் ஆட்சியை அமைக்க அழைப்பு விடுக்கும், ஆளுநரின் அதிகாரம்..


‘’மாநிலத்தின் ஆளுநராய் ஒருத்தர் நியமிக்கப்படுவதற்கு இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். 35 வயது ஆகியிருக்கவேண்டும்’’ என்று குடியரசு தலைவருக்கே நிபந்தனைகள் வைக்கிற அரசியல் சாசனம், இந்தந்த தகுதிகளோடு இருந்தால்தான் முதலமைச்சரை நீங்கள் நியமிக்க முடியும் என்று ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கும் அரசியல் சாசனத்தின் 164- பிரிவு சொல்லவில்லை. ஆளுநர் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு மகுடம் சூட்டலாம்.

 

எம்எல்ஏ.வோ, எம்எல்சியாகவோ கூட இருந்தாகவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அடுத்த ஆறு மாதத்திற்குள இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் போதும் பதவியில் தொடரலாம்.. அவ்வளவுதான். இப்படிப்பட்ட உலக மகா அதிகாரத்தை வைத்துக்கொண்டுத்தான் ஆளுநர்கள் காலம் காலமாய் கோமாளித்தனங்களை செய்துவருகிறார்கள்..

நாற்பது உறுப்பினர்களைக்கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு 2017 மார்ச் மாதத்தில் நடைபெற்றது. எந்தகட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 17 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. பா.ஜ.க.வுக்கு வெறும் 13 இடங்கள் மட்டுமே கிடைத்தன..

அதே 2017, மார்ச். 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல்.. அங்கும், யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், 28 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியாக விளங்கியது. ஏழு இடங்கள் குறைவாக பெற்று பா.ஜ.க. 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2 ஆவது இடத்தில் இருந்தது.

இன்னொரு மாநிலம், மேகாலயா. மொத்தம் 60 எம்எல்ஏக்கள். அங்கும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 21 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது.. பாஜக வென்றது, இரண்டே இடங்கள்தான்.

ஆனாலும் பாருங்கள் மூன்று மாநிலங்களிலும் ஆளுநர்கள் சொல்லிவைத்தார்போல், தனிப்பெருங்கட்சியான காங்கிரசை நிராகரித்துவிட்டு, பாஜகவைத்தான் அழைத்து ‘கூட்டணி’ ஆட்சிக்கு அடிகோலினார்கள். அந்த ஆளுநர்கள் சொன்ன விளக்கம், தனிப்பெருங்கட்சி என்பதைவிட, நிலைமையான ஆட்சியை தரும் அளவுக்கு பாஜகவும் அதற்கு ஆதரவுதெரிவித்த கட்சிகளும் தந்த
நம்பகத்தன்மை கொண்ட பெரும்பான்மைதான் என்றனர்.

தனிப்பெருட் கட்சியை அழைப்பதில்லை என்று அண்மைக்காலமாக ஆளுநர்கள் செயல்பட்டுவந்த நிலையில்தான், தற்போது கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போனது.. கோவா, மணிப்பூர்., மேகலாயா டிரெண்ட்படி பார்த்தால், தனிப்பெருங்கட்சியாக எது வந்திருக்கிறதோ அதனை ஆளுநர் கண்டுகொள்ளக்கூடாது. காங்கிரஸ் வந்திருந்தால் அப்படித்தான்
நடந்திருக்கும்..ஆனால் இம்முறை பாஜக தனிப்பெருங்கட்சியாக வந்துவிட்டது.. அதைவிட முக்கியமான விஷயம்.

தனிப்பெருங்கட்சியான பாஜக ஆட்சியமைக்காவிட்டால் வேறு யாரும்
அமைக்கமுடியாது என்ற குழப்பமான சூழலும் இல்லை.. அப்படி
இருந்திருந்தால் பாஜகவுக்கு யாருமே குறைசொல்லாதபடி சாதகமாக
இருந்திருக்கும்.

ஆனால் காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமான ஜேடிஎஸ்சும் கூட்டாக இணைந்து நிலையான ஆட்சியை தரும் அளவுக்கு தங்களிடம் பெரும்பான்னைமை இருப்பதாக ஆளுநரிடம் சொன்னது.. அதாவது, கோவா, மணிப்பூர், மேகலாயா மாநிலங்களில் தனிப்பெருங்கட்சியான காங்கிரசை அழைக்காமல் நிலையான
ஆட்சிக்காகத்தான் மற்றவர்களை ஆட்சி அமைக்க அழைத்தோம் என
அந்த ஆளுநர்கள் சொன்ன அதே டயலாக் தொணி.

ஆனால் மற்ற மாநில ஆளுநர்கள் செய்ததைத்தான் தானும் செய்யவேண்டுமா என்று நினைத்த கர்நாடக ஆளுநர், தனிப்பெருங்கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.தற்போதைக்கு மொத்த எண்ணிக்கையான 222 ல், ஆட்சியை அமைக்க பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை. ஆனால் எட்டு இடங்கள்
குறைவாக உள்ள பாஜகவை ஆளுநர் அழைத்து முதலமைச்சர்
வேட்பாளர் என்று சொல்லப்பட்ட எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணமே
செய்துவைத்துவிட்டார்.

104 எம்எல்ஏக்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என பாஜக ஆளுநரிடம் பட்டியல் கொடுக்கிறது.. ‘’நாங்கள் மெஜாரிட்டிக்கும் தேவைக்கு அதிகமாய் அதாவது 115 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிறோம்’’ என்று காங்கிரஸ்-ஜேடிஎஸ் பட்டியலை கொடுக்கிறது.. இரண்டு பட்டியலையும் இரண்டு கைகளில் வைத்து பார்க்கும் கர்நாடக ஆளுநருக்கு 104 தான் பெரியதாய் தெரிகிறது.
104-க்கு மேலும் எங்கிருந்து ஆதரவு கிடைக்கும் என்றுகூட அந்த நிலையில், ஆளுநருக்கும் தெரியாது, அவ்வளவு ஏன் பாஜகவுக்கே தெரியாது.. ஆனால் மெஜாரிட்டியை நிரூபிக்காமலேயே எடியூரப்பா என்பவர் முதலமைச்சராக அரசாங்கத்தில் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். நீக்குபோக்கான அரசியல் சாசனத்தால் எவ்வளவு அக்கப்போர்கள் அரங்கேற வழிகள்..! எடியூரப்பாவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதால் அரசு
நிர்வாகம் தப்பியது.மீண்டும் விஷயத்திற்கு வருவோம். எளிமையாக சொன்னால், ஒருத்தர் அவர் நண்பரை நம்பி, இருபது லட்ச ரூபாய் வீட்டை விற்றுத்தரும்படி கேட்கிறார். ஒருவர் தனியாக வந்து 18 லட்சத்தை கொடுத்து வீட்டை விலைக்கு கேட்கிறார்..

அதேநேரத்தில் இரண்டுபேர் கூட்டாக வந்து 25 லட்ச ரூபாய்க்கு விலைக்கு
கேட்கிறார்கள். இரு தரப்புமே கையில் பணத்தை தயராய் வைத்திருக்கிறார்கள். யாருக்கு அவர் விற்பார்? இது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் விற்றுத்தரவேண்டிய வேலையை செய்யவேண்டியவர் என்ன செய்கிறார்?

25 லட்சம் கேட்கும் பார்ட்டிகளை விரட்டியடித்துவிட்டு, 18 லட்சரூபாய் பார்ட்டிக்கு வீட்டை கிரையம் பேசுகிறார். 18 லட்சத்தை வாங்கிக்கொண்டு பதினைந்து நாட்கள் டைம் தருகிறேன், பாக்கி ரெண்டு லட்சத்தை கொண்டுவாருங்கள்.. அப்புறம் பத்திரம் பதிவு செய்துதருகிறேன் என்று சொல்கிறார்.. அப்படியானால் வீட்டை
விற்கச்சொன்ன ஜனநாயகம் என்ற நண்பருக்கு துரோகம் நடக்கிறதா
இல்லையா?

இப்போது உச்சநீதிமன்றம் இடையில் புகுந்து என்ன சொல்லியிருக்கிறது, பத்திரப்பதிவுக்கு 15 நாட்கள் தரமுடியாது.. நாளைக்கு மே 19ந்தேதி மாலைக்குள் பாக்கி இரண்டு லட்சத்தை புரட்டிபத்திரப் பதிவு செய்தாக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் நிரூபிக்காமலும் போகலாம்.

பிரச்சினை அதுவல்ல. முதலமைச்சரை நியமிப்பதில் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்தை திருத்தி ஒழுங்கு படுத்தாமல்விட்டுவிட்டு இனியும் வேடிக்கை பார்ப்பது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக அரசியலுக்கு பேராபத்து, தொடர் கேவலம்.


உதாரணத்திற்கு நாளை சிறை தண்டனை முடிந்து ஒருவர் வருகிறார்.
சட்டப்படி அவரால் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அவரை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநரால் முடியும்.. இதனை எதிர்த்து கடுமையான குரல்கள் எழலாம். அது வேறுகதை. ஆனால் பதவிப்பிரமாணம் செய்துவைப்பதை அரசியல் சாசனத்தால் தடுக்க முடியுமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

இன்னொரு விஷயம், தேர்தலில் போட்டியிட முடியாத அந்த நபர் முதலமைச்சராக தொடர முடியும். எப்படி? ஆறு மாதத்திற்குள் அவர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின்படி. தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்ட முதலமைச்சர் நபர், ஆறுமாத கெடு நெருங்கிய நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு ராஜினாமா செய்துவிடலாம். மறுபடியும் சில
தினங்கள் கழித்து முதலமைச்சராக அவருக்கு ஆளுநர் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைத்து, ஆறு மாத எலக்சன் கொடுத்து

பதவியில் வலம் வரம் செய்யலாம்.. ஆறு மாக கெடு நெருங்கும் போதெல்லாம் ராஜினாமா, மீண்டும் பதவியேற்பு என அரசியல்சாசனத்தின் கையை கட்டிப்போட்டுவிட்டு இதை செய்யலாம். வெட்கம் மானம் பார்க்காமல் செயல்படுவது என்று துணிந்துவிட்டால் இதெல்லாம் சாத்தியமே.. இது ஒரு சாம்பிளுக்குத்தான்..

பின்னாளில்செல்லுபடியாகிறதோ இல்லையோ, ஆனால் ஆளுநர் நினைத்தால்
யாரையும் முதலமைச்சராக நியமிக்க முடியும் என்பது மக்களாட்சி தத்துவத்தில் எவ்வளவு பெரிய அவலம்.

ஒருத்தர் ஆட்சியைமைக்க உரிமை கோரினால், பெரும்பான்மையை நீக்கமற, அனைவரின் பார்வையிலும் சரி என்று படுகிற வகையில்
நிரூபித்துக்காட்டாதவரையில், ஒருத்தருக்கு முதலமைச்சர் என்கிற கிரீடத்தை ஆளுநர் சூட்டவே முடியாது என்ற நிலைவந்தால்தான் இதெற்கெல்லாம் நிரந்தர தீர்வு காணமுடியும்.

மெஜாரிட்டியை காட்டமுடியாமல் பதவியிலிருந்து ஒரு முதலமைச்சர் விலகுகிறார் என்றால், அதுவரை அவர் போட்ட உத்தரவுகள்
செல்லுபடியாகுமா என்ற கேள்விகளை எழவைப்பதா அரசியல் சாசனத்தின் மகிமை..?

ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தின் மிகப்பெரிய
பொறுப்புகளில் உட்கார வைக்கும் விஷயத்தில் அரசியல் சாசனங்களில் உள்ள குளறுபடிகளையும் தெளிவற்ற தன்மையையும் ஒழித்துக்கட்டாதவரை, ஜனநாயகப்படுகொலை என்று கூவிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.