சென்னை:

‘எங்கப் போய் முடியப்போகுதோ’ என்று தமிழகம் மற்றம் கேரளாவில் பெய்து வரும்  மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையோரம் மற்றும் கேரளா, கர்நாடகவில் கன மழை கொட்டி வரும் நிலையில், தற்போது, எங்கப் போய் முடியப்போகுதோ என்று பயமுறுத்தலுடன் ஒரு பதிவை போட்டுள்ளார் பிரதீப் ஜான்.

கேரளாவில் தொடர்ந்து கடும் மழை பெய்யும் என்று கூறியிருப்பவர், அதனுடன் நீலகிரி, வால்பாறை, ஊட்டி, குன்னூர் மற்றும் கோவை மாநகரத்தின் சில பகுதிகளிலும் கனத்த மழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் 73 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தெரிவித்தவர், கடந்த 1988ம் ஆண்டு 83.7 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் குன்னூரில் இந்த மாதம் முழுவதும் மழை இருக்கும் என்றவர், அங்கு கடந்த 15 மணி நேரத்தில் 81 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் கேரளாவின் மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் நாளை முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளையும் இதே விகிதத்தில் மழை தொடர்ந்தால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்குப் பகுதி, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக, மண் சரிவு, வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 7 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு,  தமிழகத்தில் மழை எப்போது பெய்யத் தொடங்கும் என்பது குறித்த பதிவில், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரளா மற்றும் தமிழக மலைத் தொடர் பகுதிகளில் (வால்பாறை, நீலகிரி, பெரியார் நீர்ப்பிடிப்பு, நெல்லை மலைத் தொடர், கன்னியாகுமரி) வரும் திங்கட்கிழமை முதல் மழை அளவு அதிகரிக்கும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கிய KTC மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெப்ப சலனத்தால் மழை உருவாகும். அங்கும் இங்குமாக மழை பெய்யத் தொடங்கும். ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு அனைத்தும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நீங்கள் நிறைய டமால் டுமீல்கள் மற்றும் ரெட் தக்காளி ஸ்பெல்களை பார்க்கலாம் என சமீபத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.