என்கவுண்ட்டர்கள்… ஏன் இந்த வரவேற்பு? ஏழுமலை வெங்கடேசன்

அரசாங்கத்தாலும் சரி, அரசாங்கத்தின் அமைப்புகளாலும் சரி என்கவுண்ட்டர்கள்… ஏன் இந்த வரவேற்பு?

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ஹைதராபாத் இளம் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தை, இந்தியாவை உலுக்கும் கொடூர சம்பவம் என உலகின் முன்னணி நாளிதழ்கள் கூட விவரித்தன.

அந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் என நான்குபேர் பிடிபட்ட போது அவர்களை உடனே சுட்டுக் கொல்ல வேண்டும், தெரு நாயைப் போல் அடித்துக்கொல்ல வேண்டும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பொங்கினார்கள் .

இப்படி பரபரப்போடும் பதற்றத்தோடும் பேசப்பட்டு வந்த அந்த சம்பவம் நடந்த பத்தாவது நாளான இன்று, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நான்குபேரும் போலீஸ் என்கவுண்டரில் பலியாகி இருக்கிறார்கள்.

செய்திகேட்டு ஒருபக்கம் நாடே போலீசாரின் நடவடிக்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிதைக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆத்மா சாந்தியடைய இதைவிட வேறென்ன வேண்டும் என சிலிர்க்கிறார்கள். வழக்கம் போல மனித உரிமை ஆர்வலர்களும் கோதாவில் இறங்கி விட்டனர். குற்றமே நிரூபிக்கப்படாமல் உடனே சுட்டுக்கொலை என்றால், சட்டம் எதற்கு கோர்ட் எதற்கு என்றெல்லாம் அவர்களது கோபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

இன்னொரு பக்கம் தாம் என்ன செய்கிறோம் என்பதை உணராமலேயே போலீசாருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக சொல்லி அவர்களுக்க எதிராக சில சிக்கல்களை உருவாக்கி வருகின்றனர் படித்த மேதைகளும் ஊடகங்களும்..

இவ்வளவு சலசலப்பை உண்டு பண்ணியிருக்கும் ஹைதராபாத் இளம்பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடூரத்தை சற்றே இங்கு நினைவு கூற வேண்டியது மிகவும் அவசியம்.

நவபம்பர் 27-ந்தேதி மாலை ஐந்தரை மணிக்கு சுங்கச்சாவடி அருகே லாரி ஓட்டுநர் ஆரீப் என்பவன் தலைமையில் நான்குபேர் கொண்ட கும்பல் மது அருந்துகிறது. அங்கே கிளினிக்கிற்கு சென்று விட்டு பணிமுடித்து திரும்பும் பெண் டாக்டரை குறிவைத்து காத்திருக்கிறது, ஆரீஃப் கும்பல், முன்னதாக டாக்டரின் டூவீலரை பன்ச்ஞரும் செய்துவிட்டனர்.

பணிமுடிந்து திரும்பிய டாக்டர், பன்ச்ஞரை பார்த்து செய்வதறியாமல் திகைக்க, உடனே அவருக்கு உதவுபோல் ஆரிஃப் கும்பல் நடித்து, கொஞ்ச நேரத்தில் ஒரு மறைவிடத்திற்கு கடத்திக்கொண்டு போகிறது. அங்கே அவரின் வாயில் மதுவை ஊற்றி கூட்டாக பல மணிநேரம் பலாத்காரம் செய்கிறது. மயக்கம் தெளிந்து பெண் டாக்டர் சத்தம் போடவே அவரை மூச்சை திணறவைத்து கொலையும் செய்கிறது. பின்னர். பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து ஒரு பாலத்தின் அருகே டாக்டரின் உடலை எரித்துவிட்டு, நான்கு பேருமே அவரவர் வீட்டுக்கு சர்வசாதாரணமாக போய்விடுகின்றனர்.

இதற்கிடையே பெண் டாக்டரை வீட்டிலுள்ளவர்கள் தேட ஆரம்பிக்கிறார்கள்..காவல் நிலையத் திற்கு சென்று புகார் கொடுத்தால், ‘’யாருடனாவது ஓடிப்போய் இருப்பாள்’’ என்று நக்கலடித்து விட்டு புகாரை வாங்க மறுத்து விடுகின்றனர்..

பெண் டாக்டர் குடும்பத்தினர் திரும்பத்திரும்ப வற்புறுத்தியதும், இது எங்கள் எல்லையில் வரவில்லை என்று மாறிமாறி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு விரட்டி அடிக்கின்றனர் போலீசார்..

கடைசியில் காலை 7 மணிக்கு எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் பெண் டாக்டர்..
சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தந்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் பாதகம் செய்வதர்கள் இவர்கள்தான் என போலீசாரின் விசாரணையில் துல்லியமாக அடையாளம் காட்டின.  அதைவைத்து ஆரீஃப் உள்ளிட்ட நாலுபேரையும் போலீசார் கைது செய்தனர். பெண் டாக்டர் குடும்பத்தின் புகாரை உடனடியாக வாங்க மறுத்த மூன்று போலீஸ் அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதான் சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்களின் தொகுப்பு.

பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நான்குபேர்தான் இன்று, பலாத்காரம் படுகொலை, சடலம் எரிப்பு ஆகியவை நிகழ்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சம்பவம் எப்படி நடந்து என்று விளக்கச்சொன்னபோது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது போலீசார் சுட்டதில் நான்குபேரும் உயிரிழந்துவிட்டனர். இதுதான் காவல்துறை தரப்பு தகவல்.

ஒரு பக்கம் பொதுமக்கள் வரவேற்பு, கொண்டாட்டம், இன்னொரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் கண்டனங்கள்..

முதலில் ஊடகங்களில், போலீஸ் என்கவுண்ட்டரில் நான்குபேர் சுட்டுக்கொலை என செய்தி போடுவதே பொருத்தமற்ற வகையில் உள்ளது. எப்போதுமே என்கவுண்ட்டர் செய்திகளை இப்படித்தான் போடுகிறார்கள். நன்றாக படியுங்கள், கொலை என்ற வார்த்தையை பயன்படுத்து கிறார்கள்.

ஹைதராபாத்தில், இளம் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாய் கைது செய்யபட்ட 4 பேர் போலீசாரால் சுடப்பட்டதில் பலி..

சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது நான்கு பேரும் தப்பியோடினர். அவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கியால் சுட்டபோது இப்படி நிகழ்ந்து விட்டதாக காவல்துறை தரப்பு தகவல் என செய்தி போடலாம்.

குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிசெய்யாத வரை, அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். கொன்றவர்கள் அல்ல. ‘’கொன்றதாய்’’ கைது செய்யப்பட்டவர்கள்.

அது போகட்டும், என்கவுண்ட்டர் என்றால் என்ன? ஒன்று, குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப் பட்டவர்கள் தப்பியோடும்போது அவர்களை பிடிக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கை. எதிரிகள் தாக்கினால் அது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும். அதைத்தான் என் கவுணட்ட்ர் என்பார்கள்.

இன்னொன்று கிரிமினல்களை கைதுசெய்ய சுற்றிவளைக்கும்போதும் சில சமயம் போலீசார் – கிரிமினல்கள் இடையே மோதல் ஏற்படும். அங்கே நடப்பதும் என்கவுண்ட்டர்.

உயிரோடு பிடிப்பதற்காகவும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் துப்பாக்கி பிரயோகத்தை போலீஸ் தரப்பு நிகழ்த்தும்.. சுட்டுக்கொன்றே தீரவேண்டும் என்று தீர்க்கமானமுடிவு ஆரம்பத்தில் இருக்காது. போலீசார் சுடும்போது அதில் எதிரிகள் காயமடைந்து பிடிபடுவதும் உண்டு. படு காயங்களால் பலியாவதும் உண்டு. இதெல்லாம் தற்செயலாக நடப்பவை. காவல்துறை சார்பில் என்கவுண்ட்டர்கள் இப்படித்தான்.

தீவிரவாதிகள் ஊடுருவும்போதும் இதேபோல ராணுவம் மோதலை எதிர்கொள்ளும். உயிரோடு பிடிக்க முடியும் என்று தெரிந்தால் அதன்படி ஆரம்ப கட்ட நடவடிக்கை இருக்கும். தீவிரவாதி களால் தமக்கும் பொதுமக்களுக்கும் நிச்சயம் ஆபத்து வந்தே தீரும் என்று ஒரு கட்டத்தில் தெரிந்துவிடும். அப்போதுசுட்டுத்தள்ளுவதை தவிர வேறுவழியில்லை என எதைப்பற்றியும் யோசிக்காமல் போட்டுத்தள்ளுவதே ஒன்றே இலக்கு என சுட்டுத்தள்ளும் மனநிலைக்கு போய்விடுவார்கள்.

இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது என்று, அங்கே செய்திக்கு வார்த்தைகளை பயன்படுத்தினால் அது நாட்டின் பாதுகாப்பாக நடத்தப்பட்டது என்ற அர்த்தத்தில் போய்விடும். ராணுவம் வெர்சஸ் உள்நாட்டு பிரஜைகள் என்றால், பல சிக்கல்கள் தலைதூக்கியே தீரும் என்பது வேறு விஷயம்.

ஆனால்,  இங்கே போலீஸ் என்கவுண்ட்டர் என்றால் கைதிகளை கூப்பிட்டுக்கொண்டு போய் ஓட விட்டு சுட்டுக்கொல்வது போல வார்த்தைகளை வடிவமைக்கிறார்கள். உண்மை அதானே என்று கேக்கலாம். அது மனித உரிமை ஆணையத்திடம் போலீசார் கைகட்டி பதில் சொல்லவேண்டிய விஷயம்.

மக்கள் மனதில் சில சம்பவங்களுக்கு எதிராய் கடுமையான கொந்தளிப்பு நிலவுகிறபோது, சில சம்பவங்களை கட்டாயம் அரங்கேற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை போய்விடுகிறது அவ்வளவே. அரசாங்கத்தாலும் சரி, அரசாங்கத்தின் அமைப்புகளாலும்சரி எல்லா தரப்பையும் ஒரே நேரத்தில் ஒரே அளவுக்கு மனதளவில் திருப்தி படுத்திவிடமுடியாது.

போலீசார் உடனான மோதல் அல்லது பிடிப்பதற்கான நடவடிக்கையில் தாக்குதல் எனப்படும் என்கவுண்ட்டர்கள், என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சில உதாரணங்கள்..
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி வங்கி கொள்ளை நடந்தன. பொதுமக்களிடம் வழிப்பறிகள் வேறு.. அதில் பெரும்பாலானவை, வடநாட்டு ஆசாமி களின் கைவரிசை.. எதைவேண்டுமானாலும் செய்துவிட்டு வடநாட்டுக்கு போய்விட்டால் நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற திமிர்…

போலீசார் என்னென்னவோ பாஷையில் பேசினாலும் கொள்ளை கும்பல்களின் கொட்டம் அடங்க வில்லை.. கடைசியில் போலீசார், அவர்களுக்கே உரிய ‘’கதம் கதம்’ பாஷையில் ஐந்துபேரிடம் பேசினார்கள்.. மூச்சே நின்றது.

ஆஹா, தமிழ்நாட்டில் வம்பு தும்பில் இறங்கினால், இனி துப்பாக்கிதான் பேசும்போல என பயந்து போய், அதன் பிறகுதான் வடநாட்டு கொள்ளையர் அடக்கி வாசித்தார்கள்.. என்கவுண்ட்டர் மருந்து, அங்கே நன்றாக வேலை செய்தது.

கோவையில் பள்ளிச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து சகோதரனோடு கொல்லப்பட்ட விவகாரத்தில், கொடூரத்தை நிகழ்த்திய இருவர் உடனே பிடிபட்டனர். கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் இரு பிஞ்சுகளுக்கு ஏற்பட்ட கதியை தாளமுடியால் பிடிபட்ட இருவரின் கதையையும் உடனே முடிக்கவேண்டும் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தது.

இருவரில் ஒருவர் அப்போதே ‘தப்பியோடும்போது’ போலீஸ் துப்பாக்கிக்கு பலியானார். போலீ சாரின் அந்த நடவடிக்கையை மாநிலம் முழுவதும் மக்கள் கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே பலாத்கார கொலை வழக்கில் கைதான மனோகரன் என்ற இன்னொருவர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டது. உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்ற மும் அவரின் தூக்கை உறுதி செய்துவிட்டன. ஆனால் கருணை மனுக்கள் வாய்ப்பு இன்னும் இருப்பதால் இன்னமும் கைதி மனோகரன் உயிரோடு இருக்கிறார்.. அவர் தூக்குக்கு போயே தீருவாரா அல்லது தூக்கிலிருந்து தப்பிவிடுவாரா என்பது இப்போதைக்கு தெரியாது.ஆனால் அந்தக் கோவை பிஞ்சுகள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகப் போகின்றன..

இப்போது தெரிகிறதா, கொடூரமானவர்கள் உடனே கொல்லப்பட்டால் என்கவுண்ட்டர்களை பொதுமக்கள் ஏன் வரவேற்கிறார்கள் என்று.. ஒரே காரணம்தான், சட்டத்தின் நீதி உரிய காலத்தில் கிடைப்பதேயில்லை என்ற கோபமே.

கைது, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது, வழக்கு விசாரணை, தீர்ப்பு, மேல் நீதிமன்றங்கள் தீர்ப்பை உறுதிபடுத்துதல், ஆளுநர், குடியரசு தலைவர் போன்றோரிடம் கருணை மனுக்கள் பரிசீலனை என, ஒருவனை முழுவதுமாக தண்டிக்க எத்தனை கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது..

இவ்வளவு வாய்ப்புகள் தரப்படுவதுதான், சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டிற்கே பெருமை.  ஆனால் எதற்குமே காலக்கெடு இல்லாமல் வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டுபோவதுதான் படு கேவலம்

குரூரமான குற்றவாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தண்டிக்கப்பட்டுவிட்டால், இதே பொதுமக்கள் ஏன், என்கவுண்ட்டரை வரவேற்று கொண்டாடப்போகிறார்கள்? திண்டுக்கல் அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு கொலை நடந்த பத்தொன்பதே நாளில் மகளிர் நீதிமன்றம் பத்தாண்டு சிறை தீர்ப்பு விதித்த சாதனையும் இங்கேதான் உள்ளது.

ஆக, யார்மீது குறை இருக்கிறது. அரசாங்கம் மீதும் அதன் அமைப்புகள் மீதும்தான்.

அரசு தரப்பில், வழக்குகளை விரைவாக நடத்தாத போக்கும், நீதி பரிபாலனத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காத நீதிமன்றங்களின் போக்கும் மாறாதவரை ஹைதராபாத் என்கவுண்ட்டர் போன்றவைகளுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்புகள் இருக்கவே செய்யும்.