அகமதாபாத்: இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், முதல்நாள் ஆட்டநேர முடிவின்படி, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில், இங்கிலாந்தைவிட 13 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் ஷர்மா 57 ரன்கள் அடித்து ஆடிவருகிறார். ஷப்மன் கில் 11 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். புஜாரா டக்அவுட். சற்று நிலைத்துநின்று ஆடிய கேப்டன் விராத் கோலி 27 ரன்களுக்கு அவுட்டானார்.

தற்போது, ரோகித்துடன், அஜின்கியா ரஹானே ஜோடி சேர்ந்துள்ளார். அவர் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார். நாளை இந்திய அணி சற்று நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில், இங்கிலாந்தைவிட பெரியளவில் முன்னிலைப்பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு 1 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சிற்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன.