நெட்டிசன்:

ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி குறைந்து போகும்..

டவுன் பஸ் தவிர தொலைதூரப் பேருந்துகளை இயக்காதீர்கள்.. மிக மிக மிக மிகத் தேவை இருப்பவர்கள் டூவீலர் அல்லது வாடகை கார்களில் சென்று கொள்ளட்டும்..

வெளியூரிலிருந்து விருந்தினர்கள் வந்திருக் கிறார்கள் என்றால் அக்கம்பக்கத்தினர் போதிய இடைவெளி, சமூக இடைவெளி விட்டு பழகும்படி மிகவும் எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள். தகவல் தெரிவிக்கப்பட்டால் புது விருந்தினர் குடும்பத்திற்கு அரசாங்க தரப்பில் அறிவுரை மற்றும் கட்டுப்பாடுகளை சொல்ல வையுங்கள்..

அப்புறம் கொரோனா தொற்றாளரை எங்கோ இருக்கும் முகாமுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதை விட அவரவர் பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் தங்கி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யலாம். தெரிந்தவர்கள், உறவினர்கள் அருகில் இருக்கும்போது அன்னியப்பட்டு விட்டோம் என்ற பீதி இருக்காது..

மிகவும் ஆபத்தான கட்டத்தை நெருங்கினால் மட்டும் அதற்குண்டான மருத்துவமனைக்கு தொற்றாளாரை மாற்றலாம்.

புதிய படுக்கை, ஆடை போன்ற விஷயங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிரமம் இருக்காது. இது போன்ற சந்தர்ப்பங்களில் வசதி படைத்தவர், வசதி இல்லாத சக தொற்றாளருக்கும் நிறைய உதவி செய்வார்..

மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை தாண்டி, தொற்று சிகிச்சைக்காக கொடுக்கப்படும் உணவு வகைகளைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..

இப்போது இருக்கும் உயிர் பயத்தில் விரதம் போல் கடைபிடித்து அந்த உணவு வகைகளை பிரசாதம் போல் சாப்பிடுவார்கள்..

ஒருவருக்கு தொற்று என்றால் அந்த தெருவையும் ஏரியாவை வேலைபோட்டு அடைத்து பயமுறுத்தும் கலாச்சாரத்தை முடித்து வையுங்கள் அரசு அலுவலங்களிலேயே ஒரு பணியாளருக்கு தொற்று என்றால் ஒட்டுமொத்தமாக மூடவேண்டியதில்லை என்று நீங்களே அதாவது அரசே சொல்லுகிறீர்கள்.

இந்த பிரபலத்துக்கு தொற்று அந்த பிரபலத்துக்கு தொற்று என்ற பகிரங்க செய்திகளெல்லாம் ஒழிந்தாக வேண்டும்..

அப்புறம் கொரோனாவால் ஒருவர் இறக்க நேரிட்டால் அவர் இறுதி சடங்குகள் பீதியே இல்லாத அளவுக்கு சொந்த பந்தங்கள் முன்னிலையில் நடக்கவிடுங்கள். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்நின்று செய்யட்டும்.

பெரும் அச்சம் காரணமாக சடலங்களை உறவினர்கள் மறுக்கும் சம்பவங்கள் நடப்பதாக பல இடங்களில் கேட்க முடிகிறது. இதனால் புதிய விதிமுறைகளை வகுங்கள்.. ”சிகிச்சை பலனளிக்காமல் செத்தால் பாடியை கூட கண்ணில் காட்டமாட்டார்கள், தரமாட்டார்கள்” என்ற பீதி பரவலாக உள்ளது- இதனை போக்குங்கள்.

எல்லாவற்றையும் இனி அரசே சுமக்க முடியாது, பொதுமக்கள் தலையிலும் கொஞ்சம் பாரங்களை ஏற்றினால்தான் அவர்களும் நடப்பு நிலையை உணர்ந்து படிப்பினைகள் பெறுவார்கள்..

மேலே சொன்னவைதான் இறுதி அல்ல..

இந்த மாதிரி மாற்று வழிகளையும் முன்னெடுப்புகளையும் பரிசீலிக்கும்படி தமிழக அரசிடம் சொல்கிறோம்