கடனை திருப்பி செலுத்தவிடாமல் அமலாக்க துறை தடுத்தது…..விஜய் மல்லையா

மும்பை:

இந்திய பொதுத் துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோல் மும்பை சிறப்பு நீதிமன்றத்திலும் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று விஜய் மல்லையாவின் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் என்னுடைய முயற்சியை அமலாக்கப்பிரிவு தடுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ சில ஆண்டுகளாக கடனை திருப்பிச் செலுத்த தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த துறை அதிகாரிகள் பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

லண்டன் நீதிமன்றத்தில் என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறேன். நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல’’ என்று தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.