டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள,  சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, அமலாக்கத்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிதம்பரத்திடம் விசாரிக்க டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றதை தொடர்ந்து,  நீதிபதி அஜய்குமார் குகா, திகார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். மேலும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் என்று அனுமதி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திகார் சிறைக்குச் சென்ற அமலாக்கத் துறை துணை இயக்குனர் மகேஷ் சர்மா தலைமையிலான 3 அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது   ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சிதம்பரத்தை கைது செய்வதாக அறிவித்தனர்.  அதையடுத்து சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. விசாரணையைத் தொடர்நதே,  சிதம்பரத்தை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்புவதா அல்லது திகார் சிறையிலேயே வைத்திருப்பதா என்பதை நீதிபதி முடிவு செய்தார்.

ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், சிதம்பரத்தின் ஜாமின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதால், சிதம்பரம் சிறையில் இருந்து வெளியேறுவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.