‘தப்பியோடிய குற்றவாளி’ விஜய் மல்லையாவுக்கு எதிராக அமலாக்க துறை நடவடிக்கை

மும்பை:

விஜய் மல்லையாவை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்து புதிய சட்டத்தின் படி அவரது ரூ.12,500 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்க துறை நீதிமன்றதை நாடியுள்ளது.

புதிய சட்டத்தின்படி இந்த மனுவை அமலாக்க துறை மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தப்பியோடி குற்றவாளியாக அறிவிக்க உதவும் வகையில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய சட்டப்படி வழக்கு விசாரணை முடிந்த பின்னர் தான் பண மோசடி வழக்கில் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். இந்த வழக்கு விசாரணை முடிய நீண்ட காலமாகும். மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சட்ட மசோதா கடந்த மார்ச் 12ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மத்திய அமைச்சரவை ஏப்ரல் 21ம் தேதி ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதே நாளில் இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் ளித்தார்.

இந்த புதிய சட்டத்தின் படி பொருளாதார மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறக்கப்பிக்கப்பட்டு, குற்ற நடவடிக்கைகளை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டு நாடு திரும்ப மறுப்பவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கருதப்படுவர். இந்த நபரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது..

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான வழக்கை லண்டனில் இருந்து விஜய் மல்லையா எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.