மாணாக்கர் சேர்க்கை அங்கீகாரம் – அண்ணா பல்கலையில் ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: இந்த 2020ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் மாணாக்கர்களை சேர்க்கும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஜனவரி 10க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பிறகே, அண்ணா பல்கலையின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.

அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படும் அக்கல்லூரிகள், பல்கலைக்கழகம் வகுத்த விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டங்களின்படியே செயல்படுகின்றன.

இந்நிலையில், இந்த 2020ம் கல்வியாண்டில் மாணாக்கர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பொறியியல் கல்லூரிகள் ஜனவரி 10ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழத்தின் இணைப்புப் பெறுவதற்கான பிரிவில் சென்று, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.