வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தல் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்! ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தல் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுங்கள் என அதிமுக நிர்வாகிகளுக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

1.1.2021–-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – நவம்பர் 16–ந் தேதி; கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் – நவம்பர் 16–ந் தேதியிலிருந்து டிசம்பர் 15–ந் தேதி; சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் (வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தல்) – நவம்பர் 21–ந் தேதி, 22–ந் தேதி, டிசம்பர் 12–ந் தேதி, 13–ந் தேதி. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 2021, ஜனவரி 20–ந் தேதி.

வாக்காளர்களை சேருங்கள்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் தனிக் கவனம் செலுத்தி,

* 18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும்;

* வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும்;

* வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சீர் செய்வதற்கும்

தேவையான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும்.

அதேபோல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் எதிர்க்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாகத் தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.

முகவர்கள் நியமனம்

கழகத்தின் சார்பில் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து இப்பணியை முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில்  கூறியுள்ளார்கள்.