சென்னை

தலித் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவித் தொகையைக் கடந்த 15 மாதங்களாக அரசு அளிக்காததால் பொறியியல் கல்லூரிகள் பொருளாதார பற்றாக் குறையால் தவிக்கின்றன.

 

தலித் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி கட்டணம் உதவித் தொகையாக அரசு திரும்ப வழங்கப்படுகிறது. முதலில் இந்த கட்டணம் திரும்ப வழங்குவது கலந்தாய்வு மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஒதுக்கீடு இடங்கள் நிரம்பினாலும் நிர்வாகக் கோட்டாவிலும் பல தலித் மாணார்கள் சேருகின்றனர். அதனால் அவர்களுடைய கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் எனக் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன.

இவ்வாறு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன. புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அந்தக் கல்லூரி கல்விக் கட்டணத்தை வாங்கி விடுகிறது. அரசு அந்த தொகையைத் திரும்ப அளித்த பிறகு கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப அளிக்கிறது. ஆனால் சாதாரண கல்லூரிகளில் அது போல நிபந்தனைகள் விதிக்க முடியவில்லை. எனவே மாணவர்களைக் கட்டணமின்றி சேர்த்துக் கொண்டு  அரசிடம் தொகையைத் திரும்பப் பெற காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அரசு பல கல்லூரிகளுக்குச் சென்ற 2018-19 ஆம் ஆண்டு வழங்க  வேண்டிய கட்டணத்தொகையை இன்னும் வழங்காமல் உள்ளது. அத்துடன் 2017-18 ஆம் வருடத்துக்கான தொகையில் கல்விக் கட்டணமாக ரூ.85000க்கு பதில் அரசு ரூ.50000 மட்டுமே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே பல கல்லூரிகளுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் உண்டாகி உள்ளது.