கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை..  ஒரு பொறியாளருக்கு இப்படியுமா?

’கிட்ட நெருங்காதே’’ என ஒவ்வொரு நாட்டுத் துறைமுகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட ‘டயமண்ட் பிரின்ஸ்சஸ்’ கப்பலில் பயணம் செய்த மூவாயிரத்து 700 பேரில் உ.பி. மாநிலம் மீரட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பியூஷ் வஷிஸ்டும் ஒருவர்.

அந்த கப்பலில் பயணித்த ஒருவருக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி கொரோனா இருந்தது கண்டறியப்பட்டதால், அனைத்து பயணிகளும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

அவர்களில் பியூஷும் அடக்கம்.

23 நாட்கள் கப்பலில் ‘சிறைவாசம்’..

பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கப்பலில் இருந்து ’விடுதலை’ செய்யப்பட்டார்.

சுதந்தர காற்றைச் சுவாசிக்கும் பேராவலில் மறுநாள் இந்தியா திரும்பினார்.

வெளிநாட்டில் இருந்து வருவோரைத் தனிமைப் படுத்த வேண்டும் என்ற விதி அப்போது அமலாகி இருந்த சமயம்.

அவரது விதி-

மீண்டும் டெல்லி பக்கமுள்ள மானேசரில் தனிமைப் படுத்தப்பட்டார்.

பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 12 ஆம் தேதி வரை ’சிறை வாசம்’ அனுபவித்து விட்டு-

மறுநாள் சொந்த ஊரான மீரட் வந்தார்.

‘’ சார்.. நீங்க வெளிநாட்டில் இருந்தா வந்திருங்கீங்க?’’ என்று அதிகாரிகள் கேட்க, அவரும்’’ ஆமாம்’’ என்று சொல்ல-

‘’அப்படியானால் 14 நாள் நீங்க தனிமையில் இருக்க வேண்டும்”’ என்று ஆணையிட்டு அங்குள்ள மருத்துவமனையின் ’உள்ளே’ வைத்து அடைத்து விட்டார்கள்.

(மறுபடியும் முதல்ல இருந்தா? என அவரது மனசாட்சி கேட்டிருக்கும்)

‘தண்டனை’ காலம் முடிந்து, மார்ச் 27 ஆம் தேதி வெளியே வந்தார்.

ஊரெல்லாம் இருண்டு கிடந்தது.

ஏன்?

பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்திருந்தது.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பியூஷ், 4 ஆம் முறையாகத்  தனிமையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

சின்ன ஆறுதல் என்ன வென்றால் இப்போது, குடும்ப உறுப்பினர்கள் கூடவே இருப்பார்கள்.

கொடுமை என்ன வென்றால்-

பியூஷுக்கு பல்வேறு முறை நடத்தப்பட்ட சோதனைகளில் அவருக்கு  கொரோனா தொற்று இல்லை என்பது தான்.

– ஏழுமலை வெங்கடேசன்