சென்னை:
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு, இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்து அதனை உறுதி செய்தது. இதையடுத்து, இறுதிசெமஸ்டர் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம், இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாதிரி ஆன்லைன் தேர்வு 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இறுதி செமஸ்டர் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.