சென்னை:

பொறியியல் ஆன்லைன் விண்ணப்ப விவகாரம் தொடர்பாக  உயர்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தாத  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு முதல் தமிழகத்தில்  பொறியியல் படிப்பு மற்றும் கலந்தாய்வுக்கு  ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை அறிவித்து, விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகினறன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது கிராமப்புற மாணவர்கள், வங்கி வசதி இல்லாத மாணவர்கள்  பணம் செலத்தும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும்  மாணவர்களிடம் கட்டணத்தை வரைவோலையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில,ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும்,  தமிழகத்தில் உள்ள 42 உதவி மையங்களில் டிடி மூலம் பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் என்றும் கூறி உள்ளது.

டிடி வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கு ஏற்ப மே 18க்குள் சாப்ட்வேர் மாற்றப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே உத்தரவிட்டபடி பொறியியல் கட்டணத்தை டிடி மூலமாக பெற வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அண்ணா பல்கலை.க்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

மேலும், உயர்நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்று நினைக்கிறீர்களா என்றும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.