பொறியியல் ஆன்லைன் விண்ணப்பம் வழக்கு: டிடி, செக் மூலம் கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்

சென்னை:

பொறியியல் படிப்பு மற்றும் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலை அறிவித்து, விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகினறன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது விண்ணப்பம் தமிழிலும்   இருக்க வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்கள், வங்கி வசதி இல்லாத மாணவர்கள்  பணம் செலத்தும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் நேற்றைய விசாரணையின்போது தெரிவித்திருந்தனர்.

‘இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக்கொள்வதாக அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மேலும்  டிடி, செக் போன்றவற்றை, அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலை சார்பில் 42 உதவி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும,அதில்  விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு வழிகாட்டப் போதுமான ஆட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிலைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யக் கூறி வழக்கைப் பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.