பொறியியல் படிப்பு: இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: தமிழக அரசு

சென்னை:

ந்த ஆண்டு பொறியியல் படிப்புகான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு  மே 3ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு  நடைபெற உள்ள பொறியியல் கலந்தாய்வு குறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்ர். அப்போது அவர் கூறியதாவது,

பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதே போல, விண்ணப்பப் பதிவும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்று கூறினார்.

மாணவரகள்  இருந்த இடத்தில் இருந்து கொண்டே  ஆன்லைன் மூலமாக மே 3 முதல் 30ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக 42 கல்லூரிகளில் பிரத்யேக  மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த  42 கல்லூரிகளில் அமைக்கப்படும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மையங்களில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை சரியாக பதிவு செய்ய உதவி செய்யப்படும் என்றும், ஆன்லைன் பதிவு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு, அந்த கல்லூரிகளுக்கு கூடுதலாக கட்டணம் கிடையாது, விண்ணப்ப படிவத்திற்கான கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள், தங்கள் இடத்தில் இருந்தே பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்கக ஜூன் முதல் வாரத்தில் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று காண்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில்,  அரசு கல்லூரிகளுடன் தனியார் கல்லூரிகளும் சேர்ந்து  மொத்தம் 586 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. ஆனால், இந்த ஆண்டு 19 கல்லூரிகள் நீங்கலாக 567 கல்லூரிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்,. வரும் மே 15ம் தேதி  எத்தனை கல்லூரிகள் பங்கேற்கின்றன என்ற சரியான தகவல் தெரியவரும் என்று கூறினார்.

மேலும், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு குறித்து, மாணவர்களுக்கு குறும்படம் மூலம் விளக்கப்படும் என்றும்,  பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்  மாணவர்கள் சான்றிதழ் சரிபாக்க 6 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், அதில் பங்குபெற முடியாதவர்கள் 7வது நாள் சென்னை வந்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்குபெற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர் வரமுடியாத நிலை ஏற்பட்டால், அவரது  பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் சான்றிதழைக் கொண்டு வரவும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் மாணவர்களின் வசதிக்காக, பாடப்பிரிவை தேர்வு செய்யவும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளை தேர்வு செய்யவும்  வாய்ப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.