லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

359 என்ற கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 4வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அடித்த 135 ரன்கள் வெற்றிக்கு பிரதான காரணமாய் இருந்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 179 ரன்களும், இங்கிலாந்து 67 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்தின் வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் ஜோ டென்லி ஆகியோர் அரைசதம் அடித்து முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கினர். பேர்ஸ்டோவும் 36 ரன்களை அடித்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு அரைசதமெல்லாம் போதாத நிலையில்தான் பென் ஸ்டோக்ஸ் தனது பங்களிப்பை வேறுவிதமாக செலுத்தினார்.

அவர் அசராமல் இறுதிவரை நிலைத்து நின்று ஆடி, 219 பந்துகளை சந்தித்து 135 ரன்களைக் குவித்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடக்கம். அவரை இறுதிவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கடைசி விக்கெட்டை கையில் வைத்து வெற்றியை சாதித்தார் பென் ஸ்டோக்ஸ்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், தொடரை சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது இங்கிலாந்து.