லண்டன்: நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பிரமாண்ட வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்தின் 305 ரன்களை விரட்டி வந்த நியூசிலாந்து, வெறும் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது.

டாஸ் வென்ற இங்கிலாந்து வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஜோடிகளான ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக ஆடியதைப்போலவே ஆடினார்கள். ராய் அரைசதம் அடிக்க, பேர்ஸ்டோ சதமடித்தார். மோர்கன் 42 ரன்களை அடித்தார். ஜோ ரூட் 24 ரன்களை அடித்தார்.
எப்படியும் 350 ரன்களைத் தாண்டிவிடும் இங்கிலாந்து என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவர்களை நியூசிலாந்து அணி சிறப்பாக வீசியதால், 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மேட் ஹென்ரி மற்றும் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர், எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்தின் பேட்டிங் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்தது. மிக முக்கிய வீரரான வில்லியம்சன் எதிர்பாராத முறையில் ரன்அவுட் ஆனார். டாம் லேதம் மட்டுமே 57 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் 30 ரன்களைக்கூட எட்டவில்லை. ஏதோ நாங்களும் ஆடுகிறோம் என்பதைப் போலவே ஆடினார்கள்.

மொத்தத்தில் 45 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 186 ரன்கள் மட்டுமே எடுத்து, 119 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.

இங்கிலாந்தின் தரப்பில் மார்க் உட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற இங்கிலாந்து அணி, அரையிறுதியில் மூன்றாவது அணியாக நுழைந்துவிட்டது.