சிட்னி: தனது கணிப்பு தவறாகிவிட்டது என்றும், இந்திய அணி தனது முகத்தில் கரியைப் பூசிவிட்டது என்றும் பேசியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

அடிலெய்டு பகலிரவுப் போட்டியில், இந்திய அணி மோசமாக தோற்றதையடுத்து, இத்தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகும் என்று கணித்திருந்தார் இங்கிலாந்தின் மைக்கேல் வான். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது.

இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது, “அடிலெய்ட் தோல்விக்குப் பிறகே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0 என்று வெல்லும் என்று கூறினேன். அணித்தேர்வுச் சிக்கல்கள், காயங்கள் ஆகியவற்றினால் இந்தியாவின் ஒற்றைப்பார்வை ரசிகர்கள் கூட, , இந்திய அணி தொடரை வெல்லுமெனறு நம்பியிருக்க மாட்டார்கள்.

ஆனால், இந்திய அணி என் முகத்தில் கரியைப் பூசி விட்டனர். ஆனால் இவ்வளவு பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் ஆகியோரது நல்திறனைப் பார்க்கும்போது என் கணிப்பு தவறானது நல்லதுதான் என்று தோன்றுகிறது.

ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்த இந்த அடி, அடுத்த ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு நல்ல தெம்பைக் கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களை இந்தியா அம்பலப்படுத்தி விட்டது, இதை ஜோ ரூட் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்பலாம். இதற்கு முன்னால் ஆஸ்திரேலிய அணியிடம் இவ்வளவு பலவீனங்கள் இருப்பது தெரியாமல் போனது.

2011ம் ஆண்டிற்கு பிறகு, ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அணி தொடரை வெல்வதற்கு, நிச்சயம் இந்தியாவைப் பார்த்து உத்வேகம் பெற்றிருக்கும். இதைவிட, இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடவிருக்கிறது; அது இங்கிலாந்துக்கு என்ன கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறதோ என்பதே என் கவலையாக உள்ளது” என்றுள்ளார் அவர்.