விறுவிறுப்பை எட்டிய முதலாவது டெஸ்ட் – 170 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து!

சவுத்தாம்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில், 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. இதன்மூலம் 170 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இன்னும் ஒரு நாள் ஆட்டமே பாக்கியுள்ள நிலையில், இங்கிலாந்திற்கு இன்னும் 2 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், அந்த அணியை விரைவில் ஆட்டமிழக்கச் செய்து, 200 ரன்களுக்குள்ளான இலக்கை மேற்கிந்திய தீவுகள் விரட்டினால் வெற்றிபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் டாம் சிப்ளே மற்றும் ஸாக் கிராலே உள்ளிட்டோர் அரைசதம் அடிக்க, ரோரி பர்ன்ஸ் 42 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களும் அடித்தனர்.

விண்டீஸ் தரப்பில் ஹோல்டருக்கு இந்தமுறை 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது. கேப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க‍ைப்பற்றினர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்தப் போட்டி, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.