செயற்கைக் காலை இழந்த பின்னும் ஃபீல்டிங்கை தொடர்ந்த வீரர்

துபாயில் நடந்த மாற்றுத்திறனாளர்களுக்கான 20/20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த இறுதிப்போட்டியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் லியாம் தாமஸில் செயற்கைகால்கள் கழன்று விழுந்த பின்னும் ஒரு காலில் நொண்டியடித்தவாறே பந்தை விடாமல் தொடர்ந்து சென்று அதை பவுண்டரிக்கு செல்லவிடாமல் தடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இப்போட்டியில் இங்கிலாந்து தோற்றாலும் தனது முயற்சியால் அனைவரது இதயங்களையும் லியாம் தாமஸ் வென்றெடுத்தார் என்றே சொல்ல வேண்டும். “பந்தை தொடரும் முயற்சியில் கீழே விழுந்த எனக்கு, எழுந்தவுடன்தான் எனது செயற்கைக் காலை இழந்ததை உணர முடிந்தது. உடனே காலை எடுப்பதா பந்தை தொடர்வதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பந்தை தொடர்வதே சிறந்தது என்று முடிவெடுத்து அதை தொடர்ந்தேன்” என்று போட்டியின் முடிவில் பேசிய அவர் குறிப்பிட்டார்.

லியாமின் மன உறுதியும் அர்ப்பணிப்பும் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் பங்கேற்றன. அடுத்த உலககோப்பை 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் ஏழு நாடுகள் பங்கேற்கவுள்ளன.