இங்கிலாந்து 81 ரன்களுக்கு ஆல்அவுட் – இந்திய வெற்றிக்கு தேவை 49 ரன்கள்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய வெற்றிக்கு 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 33 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்திலிருந்தே தடுமாறத் தொடங்கியது.

இங்கிலாந்து அணியில் மொத்தம் 4 வீரர்கள் டக்அவுட் ஆனார்கள். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஓலி போப் ஆகியோர் மட்டுமே குறைந்தளவில் 3 இலக்க ரன்களை எடுத்தனர்.

மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர். இதனால், 30.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 49 ரன்களே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில், அக்ஸாருக்கு 5 விக்கெட்டுகளும், அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகளும் கிடைத்தன. வாஷிங்டன் சுந்தருக்கு ஒரேயொரு ஓவர் கடைசியாக கொடுக்கப்பட்டது. அதில், அவருக்கு நல்வாய்ப்பாக 1 விக்கெட் கிடைத்தது.