இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியிலும் தோல்வி கண்டதன் மூலம், டி-20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது தென்னாப்பிரிக்கா.

முந்தைய 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை ஏற்கனவே இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, மூன்றாவது போட்டியிலாவது, சொந்த மண்ணில் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர் டி காக் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். பவுமா 32 ரன்களில் அவுட்டானார்.

ஆனால், டூ பிளசிஸ் 37 பந்துகளில் 52 ரன்களையும், டுசேன் 32 பந்துகளில், 5 சிகஸ்ர்கள் & 5 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும் அடிக்க, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 191 ரன்களைக் குவித்தது தென்னாப்பிரிக்கா.

பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டம் வேறு லெவலில் இருந்தது. துவக்க வீரர் ஜேஸன் ராய் 16 ரன்களில் அவுட்டானார். ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மாலனும், ஆட்டத்தை முற்றிலும் தம் கைகளில் எடுத்துக்கொண்டனர்.

பட்லர், 46 பந்துகளில் 5 சிகஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 67 ரன்களை எடுக்க, மாலனோ 47 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகளுடன் 99 ரன்களை விளாசினார்.

இதனால், 17.4 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி, 192 ரன்களை எடுத்து, 9 விக்கெட்டுகளில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியது.

மொத்தத்தில், இந்தப் போட்டியில், பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் உண்டாக்க முடியவில்லை. இது முற்றிலும் பேட்ஸ்மென்களில் ஆட்டமாக இருந்தது.