தென்னாப்பிரிக்கா 222 அடித்தும் பலனில்லை – டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் கோப்பையை வெல்வதற்கான முக்கியமான மற்றும் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் முடிவு சரிதான் என்பதுபோல் நன்றாக ஆடி 222 ரன்களைக் குவித்துவிட்டது அந்த அணி.

அந்த அணியின் ஹென்ரிக் கிளாசன் 66 ரன்களும், பவுமா 49 ரன்களும், டி காக் & டேவிட் மில்லர் தலா 35 ரன்களும் அடித்தனர்.
ஆனால், இதற்கு சரியான பதிலடி தருவதற்கு இங்கிலாந்து அணி காத்துக் கொண்டிருந்தது பின்னர்தான் தெரிந்தது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய அந்த அணியின் ஜோஸ் பட்லர் 57 ரன்களையும், பேர்ஸ்டோ 64 ரன்களையும், மோர்கன் 57 ரன்களையும் குறைந்த பந்துகளில் அடித்து வெற்றியை உறுதிசெய்து, கோப்பை வெல்ல காரணமாயிருந்தனர்.