லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (வயது 36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

திருமணத்தை ஒட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. அதனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

திருமண விழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் இங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்த்தனர்.  உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.25 (இந்திய நேரப்படி மாலை 4 மணி ) மணியளவில் அரச குடும்பத்தினர் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வர தொடங்கினர்.

11.40 மணியளவில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசரும், மணமகனுமான ஹாரி ஆகியோர் தேவாலயம் வந்தடைந்தனர். 11.52 மணியளவில் பிரிட்டன் அரசு இரண்டாம் எலிசபெத் இங்கு வந்து சேர்ந்தார். பிற்பகல் 12 மணியளவில் மணமகள் மேகன் மார்க்லே காரில் வந்து இறங்கினார். சிறிது நேரத்தில் இளவரசர் சார்லஸ் மணமகளின் கையை பிடித்து தேவாலயத்திற்குள் அழைத்து சென்றார்.

பின்னர் இசைக்குழுவினரின் பிரார்த்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர்.

திருமணம் முடிந்ததையடுத்து இளவரசர் ஹாரிக்கு பிரபு (டட்ச்) என்ற பட்டமும், மேகன் மார்கிளுக்கு பிரபு பத்தினி (டட்ச்சஸ்) என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர். திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நகர் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.