உர்ஜித் படேல் ஒரு அமைதிப் புயல் : ஆங்கில நாளேடு புகழாரம்

டில்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஒரு அமைதிப் புயல் என ஆங்கில நாளேடான தி வீக் வர்ணித்துள்ளது.

கடந்த சில தினங்களாக ரிசர்வ் வங்கிக்கும் பாஜகவின் மத்திய அரசுக்கும் இடையே கடும் மனத்தாங்கல் இருந்து வருகிறது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் வைப்பு நிதியில் இருந்து பணம் கேட்டதாகவும் அது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால் ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.

பிரப்ல ஆங்கில நாளேடான தி வீக் ஒரு செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது :

”பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார். அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்தன. ஆதரவாளர்கள் இதனால் கருப்புப் பணம் ஒழிந்து நிலைமை சீரடையும் என தெரிவித்தனர். எதிர்பாளர்கள் இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பு எனக் கூறினார்கள்.

ஆனால் இது குறித்து பேச வேண்டிய ஒருவர் எதுவும் பேசவில்லை. அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல். அவர் எதையும் பகிரங்கமாக பேசுவதும் கிடையாது. முந்தைய ஆளுநர் ரகுராம் ராஜன் பல முறை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் உர்ஜித் படேல் எதையும் வெளிப்படையாக கூறாததால் அவர் அரசுக்கு ஆதரவானவர் என ஒரு எண்ணம் எழுந்தது.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் உர்ஜித் படேல் அமைதியாக தனது பணிகளை செய்து வருகிறார் என்பது அப்போது தெரியவில்லை. வங்கிகளுக்கான வட்டி விகித சீரமைப்பு நடவடிக்கைகளின் போது உர்ஜித் படேல் தாம் ஒரு அமைதிப் புயல் என்பதை நிரூபித்து விட்டார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆசார்யா மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதாக கருத்து தெரிவித்தார்.

உர்ஜித் படேல் நேரடியாக இது குறித்து எதுவும் கூறவில்லை எனினும்  துணை ஆளுநர் விரல் ஆசார்யாவின் கருத்துக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த உர்ஜித் படேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க்கவில்லை. ஆயினும் அவர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

வாஜ்பாய் அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த மோகன் குருசாமி இந்த நடவடிக்கைக்காக உர்ஜித் படேலுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் எதிர்ப்பால் உர்ஜித் படேல் பதவி விலகுவார் என பல செய்திகள் கூறி வருகின்றன. ஆனால் சுப்ரமணியன் சாமி போன்ற பாஜக தலைவர்களே படேலுக்கு ஆதரவாக உள்ளனர் உர்ஜித் படேல் பதவி விலகினால் அதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான் பொறுப்பு என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கூட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைவரும் அந்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்”

என அந்த நாளேடு தெரிவித்துள்ளது.