லண்டன்: சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டைக் கண்டித்து, பிரிட்டனுக்கு வருகைதரும் அவரின் கவனத்தை ஈர்க்க, 18 வயது இளைஞர் ஒருவர் வித்தியாசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான தோட்டத்தில், புற்களை செதுக்கும் இயந்திரத்தின் உதவியுடன், போலார் கரடி மற்றும் பெரிய ஆண் குறியின் உருவங்களை வரைந்து, “எக்ஸ்கியூஸ் மீ டிரம்ப், பருவநிலை மாற்றம் என்பது உண்மையானது” என்ற வாசகத்தையும் செதுக்கி வைத்துள்ளார்.

எசெக்ஸ் பகுதியில் ஹாட்ஃபீல்டு ஹெத் என்ற இடத்தின் அருகில் ஸ்டான்ஸ்டெட் விமான தளத்தில் தரையிறங்கும் அமெரிக்க அதிபர், தனது உருவாக்கத்தை கட்டாயம் கவனிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார் அந்த இளைஞன்.

“பருவநிலை மாற்றம் தொடர்பான வாதத்தை அமெரிக்க அதிபர் மறுத்து வருவதால்தான், அவரின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்தேன்” என்றும் கூறினார்.

இந்த பதின்ம வயது இளைஞன்தான், “Born Eco” என்ற வலைதளத்தை ஏற்படுத்தி, அதன்மூலமாக சுற்றுச்சூழலை காக்கும் வணிகர்களுடன், நுகர்வோரை இணைக்கும் பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.