சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல் உள்பட 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும், இருப்பு  வெகுவாக உயர்ந்துள்ளதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையிலும்,ஏரிகளை சுத்தப்படுத்தி, பாதுகாத்து,  சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் முயற்சியில் தமிழகஅரசு  ஈடுபட்டு வருகிறது. அதுபோல  சென்னைக்கு குடிநீர் தேவையை சமாளிக்கவும், நிலத்தடி நீரை தக்க வைக்கவும், சென்னை  அருகே உள்ள வேங்கைவாசல், பெரும்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஏரிகளை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் முயற்சியிலும் தமிழகஅரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில்,  கடந்த சில வாரங்களாக  சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளம் குட்டைகள் நிரம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளான  பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில், அவ்வப்போது பெய்து மழை காரணமாக தண்ணீர் இருப்பு உயர்ந்துள்ளது. ஆந்திராவில் திறந்துவிடப்பட்டுள்ள கிருஷ்ணா நீர், சென்னைக்கு தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால்,  பூண்டி ஏரியின் நீர் மட்டமாக கணிசமாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலையில், பூண்டி ஏரிக்கு 755 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஏரியில் 712 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரியில் 112 கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 162 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,585 கன அடி என மொத்தம் 4 ஆயிரத்து 571 கன அடி தண்ணீர் 4 ஏரிகளிலும் உள்ளன.
புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைகாகக 117 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் மூலம் சென்னை மக்களின் 4 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வடகிழக்கு பருவ மழை வந்தால் ஏரிகளில் நீர் இருப்பு உயர வாய்ப்பு உள்ளது என  சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.