நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரமேஷ் பொக்ரியால், ”தேசியக் கொள்கையின் இறுதி வரைவு குறித்து 2 லட்சம் பரிந்துரைகள் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இறுதி வரை விரைவில் தயாராகிவிடும். அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை, முற்றிலும் இந்தியாவை மையமாகக் கொண்ட முற்போக்கான கொள்கையாக இருக்கும். இறுதி வரைவுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்ததும் அதுபற்றி அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர, பாடவாரியாக ஒரே நுழைவுத் தேர்வை கொண்டு வருவது குறித்து தேசிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவில் பரிந்துரைக்கப்படும். அதன்படி 300க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் நுழைவுத்தேர்வை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு நடத்தும் பணிகளை தேசிய தேர்வு முகமை நடத்தும்.

நாடு முழுவதும் உள்ள 40 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பி.எச்.டி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் சிரமத்தை போக்க, ஆண்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நுழைவுத் தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.