தாஜ்மகாலை பார்க்க நுழைவுக் கட்டணம் உயர்வு: உ.பி. பாஜக அரசு நடவடிக்கை

டில்லி:

லகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மகாலை, சுற்றிப் பார்க்க வசூலிக்கப்படும்  நுழைவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக உ.பி. மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

உலக அதிசயங்களில் ஒன்றானதும், இந்தியாவுக்கும்  பெருமை சேர்ப்பதுமான  தாஜ்மஹால் தற்போது விவாதப் பொருளாகி விட்டது. உ.பி. யோகி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதும்,  உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நுழைவு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலமான தாஜ்மகாலை காண்பதற்கான நுழைவுக் கட்டணத்தையும், அதன் முக்கிய மசூதியை காண்பதற்கான கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக உ.பி. மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது தாஜ்மகாலை காண் நுழைவுக் கட்டணமாக  40 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இனிமேல் இது  50 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாகவும்,  தாஜ்மகாலில் உள்ள  முக்கிய மசூதியை காண 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இந்த கட்டண டிக்கெட்டுக்கள் அனைத்தும் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அமைச்சர்  கூறியுள்ளார்.

கட்டண உயர்வுக்கு காரணமாக,  தேசிய சுற்றுச்சூழல் பொறியியல்  நிலையம் நடத்திய ஆய்வின் பரிந்துரைபடியே,  மசூதிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதுவரை தாஜ்மகாலில் உள்ள  மசூதியை காண  கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், தற்போது புதியதாக கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.