சென்னை: கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ரெய்டு நடத்தி கைது செய்யப்பட்டு  சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் பாண்டியன. இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது,  அப்போது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அவரது சாலிகிராமத்திலுள்ள வீடு உள்பட அவருக்கு சொந்தமான  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில்,   ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்களும்  பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பாண்டியன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாண்டியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய லஞ்சஒழிப்பு காவல்துறையினர்,  பாண்டியன் வீடு அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட,  ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவையும், நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அடுத்தக்கட்டமாக பாண்டியனை விசாரிக்க சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போது, பாண்டியனின் வங்கி லாக்கர் குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு சென்னை மட்டுமின்றி, சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வங்கியிலும் லாக்கர் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கிகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.