டில்லி

ரு தொலைக்காட்சி நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவருடன் வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலருக்கு ஒரு வாரத்துக்குள் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

ஹர்ஷ் மந்தேர் ஒரு பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.  இவர் பல புகழ்பெற்ற கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தவர்.  தற்போது டில்லியில் செண்டர் ஃபார் ஈக்விட்டி ஸ்டடீஸ் என்னும் ஒரு கல்வி நிறுவனத்தை 2000 ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.  ஏழைகள் மற்றும் வன்முறையால் பாதிக்கப் படுபவர்களுக்காக பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் வசித்து வந்த பெஹ்லுகான் என்னும் பால்பண்ணை நடத்துபவர் சமீபத்தில் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.   அவர் தனது பண்ணைக்கு மாடுகள் வாங்க மாட்டுச் சந்தைக்கு சென்ற போது அவர் இஸ்லாமியர் என்பதால் மாட்டுக்கறிக்காக மாடு வாங்குவதாக எழுந்த சந்தேகத்தில் அவர் கொல்லப்பட்டார்.

ராகேஷ் சின்கா

பெஹ்லுகான் மரணத்தைப் பற்றி ஒரு தொலைகாட்சி விவாதம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடத்தியது.  அதில் ஹர்ஷ் மந்தேர் கலந்துக் கொண்டார்.  அவருடன் விவாதத்தில் கலந்துக் கொண்டவர்களில் ஒருவர் ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்காவும் ஆவார்.  இருவருக்கிடையில் காரசாரமாக விவாதம் நடந்தது.

ஆர் எஸ் எஸ் தான் இது போன்ற படுகொலைகளுக்கு காரணம் என ஹர்ஷ் கூறினார்.  ஆத்திரம் அடைந்த ராகேஷ் விவாதத்தில் ஹர்ஷ் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப் பணம் பெருமளவில் வருவதாக குற்றம் சாட்டினார்.  மேலும் விரைவில் ஹர்ஷ் பற்றிய பல உண்மைகளை வருமானவரித்துறை வெளிக் கொணர்வார்கள் எனவும் கூறினார்.

அந்த விவாதம் முடிந்து ஒரு வாரத்திற்குள் வருமானவரித்துறை ஹர்ஷ் நடத்தும் கல்வி நிறுவனத்துக்கு கணக்கு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.  அதுவும் நிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து அனைத்து கணக்கு வழக்குகளை உடனடியாக அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஹர்ஷ் இது தன்னை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி உள்ளார்.

வருமான வரித்துறையினர் இதை மறுத்துள்ளனர்.  ’பண மதிப்புக் குறைப்புக்கு பின் வெளிநாட்டுப் பணம் பெறும் அனைத்து நிறுவனங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது போலவே இவருக்கும் அனுப்பி உள்ளோம். கணக்கு சரியாக காட்டவில்லை எனில் எல்லோரையும் போல இவரது நிறுவனத்துக்கும் வெளிநாட்டுப் பணம் வருவது தடை செய்யப்படும்,  அவரிடம் கணக்கு சரியாக இருந்தால் பயப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.