பென்சன் வாங்கும் ஈபிஎப் சந்தாதாரர்களுக்கு மருத்துவ வசதி! பண்டாரு தாத்ரேயா

டில்லி,

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு  மருத்துவ வசதிகள் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயா பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

ஏற்கனவே வீடு வாங்க விரும்புபவர்கள்  தங்களது வைப்பு நிதியில் இருந்து,  90 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்காரு தத்தாத்ரேயா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ தேவைக்காக குறிப்பிட்ட சிறிய அளவு தொகை ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து  லோக்சபாவில் ஆர்எஸ்பி உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா, நாட்டில் 58 லட்சம்  ஓய்வுபெற்றவர்கள்   தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறினார்.

அவர்கள் தற்போது பெறும் ஓய்வு ஊதியத்துடன், மருத்துவ தேவைக்காக சிறிய அளவு வசதி செய்ய அரசு முயன்று வருவதாக கூறினார். இதன்மூலம்   58 லட்சம் ஒய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

ஓய்வூதியம் பெறும் பென்சன்தாரர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் மருத்துவ வசதி செய்யப்படும் என்றும், இது குறைந்த அளவுதான் என்றும் கூறியுள்ளார்.  இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த விவாதத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பாரதியஜனதாவை சேர்ந்த ஹுக்கும் நாராயண யாதவ் , விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து பேசிய சிவசேனா உறுப்பினர் ஆனந்த்ரரா அட்சல்,  ஈபிஎப்பில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரூ.27 ஆயிரம் கோடியை ஏழை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இறுதியில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த  ஜூகால் கிஷோர் சர்மா பேசும்போது,  இந்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பல்வேறு  ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகளை  எடுத்துள்ளது என்று  கூறினார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed