ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு வருகிறது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

helicopter

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2006 ஆம் ஆண்டு பெல் 412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்காக வாங்கினார். சுமார் 11 பேர் பயணம் செய்யக்கூடிய அந்த நவீன ரக ஹெலிகாப்டர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பலமுறை பயன்படுத்தப்பட்டது.

அவரது மறைவிற்குப் பின்னும் பயன்பாட்டில் இருந்து வந்த ஹெலிகாப்டரில் கடந்த மார்ச் மாதம் பழுது ஏற்பட்டது. ஹெலிகாப்டரை பழுதை சரிசெய்ய அதிகளவு செலவாகும் என்பதால், அது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.