அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்ளுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் அழைப்பு

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

eps

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட் 18 எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்றத்தை நாட உள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அ.தி.மு.க. ஆயிரம் காலத்து பயிர். தமிழர்களுக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம். நாம் ஒன்றுபட்டு உழைத்தால் அ.தி.மு.க. எனும் பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கம் ஆக உருவெடுக்கும். உயர் நீதிமன்ற தீர்ப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தினைத் தந்துள்ளது. அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் புத்துணர்வினைத் தந்துள்ளது.

ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கம் ஆக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை அழிக்கும். அதனால், கட்சியில் இருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும். சிறு சிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும். எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும்.

நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா? உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள் “ என அழைப்பு விடப்பட்டுள்ளது.