மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி!: வைகோ கண்டனம்

சென்னை,

தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“இந்தி மொழியைத் திணிக்கும் ஆணவ ஆதிக்கப் போக்கை எதிர்த்து, 80 ஆண்டுகளுக்கு முன்னர் மறைமலை அடிகள், தந்தை பெரியார், பசுமலை சோமசுந்தர பாரதியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் போராடினர்.

65 மொழிப்புரட்சியில் இந்திய இராணுவத்தால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுத் தமிழர்கள் தங்கள் மேனிக்குத் தீ வைத்துச் சாம்பல் ஆனார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழும், ஆங்கிலம் மட்டும்தான்; இந்திக்கு இடம் இல்லை என்ற சட்டத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றினார்.

37 இல் இந்தியை ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி, அறுபதுகளில் ‘இந்தித் திணிப்பு நாசத்தை விளைவிக்கும்; ஆதலால் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே நம் மாநிலத்திற்கு ஏற்றது’ என்று சொன்னார்.

‘இந்தி பேசாத மக்கள் ஏற்றுக் கொள்ளாதவரை இந்தியைத் திணிக்க மாட்டோம்’ என்று, நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உறுதிமொழி அளித்தார்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல பண்பாடு பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், அப் பன்முகத்தன்மையைச் அழித்தொழித்து, ‘இந்தி – இந்து ராஷ்டிரா’ நாடாக்கி விடும் என்ற மூர்க்கத்தனமான வெறியுடன், இந்துத்துவ சக்திகளின் ஏவுதலால் இயங்கும் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகின்றது.

‘இந்தப் போக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டை உடைத்து எறியும்’ என நாட்டின் எதிர்கால நலனைக் கருதி, வங்கத்து மொழி அறிஞர் சுனித்குமார் சட்டர்ஜி உள்ளிட்ட மேதைகள் எச்சரித்தும்,  மத்திய அரசு அண்மைக்கhலமாக அதிகார மமதையில் அக்கிரமம் செய்கின்றது.

தமிழ்நாட்டின் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் கடந்த சில மாதங்களாக ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியை வரைகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை 75, 77 எனும் இச்சாலைகள், வேலூர், திருவண்ணாமலை வழியாகச் செல்லும் வழியில் தற்போது இந்தி, தமிழ் அல்லது கன்னட எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்துகள் அகற்றப்பட்டுவிட்டன. 533 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை 75, கர்நாடகாவில் பந்த்வா என்ற இடத்தில் தொடங்கி வேலூர் வரை வருகின்ற 73 ஆவது சாலையில் இணைகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், சித்தூர், வேலூர் நெடுஞ்சாலையில் ஆங்கில எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தி எழுதப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளும், வணிகர்களும் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருகின்ற மக்களும் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். வேலூரில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர்கள், ஆங்கிலத்தை அகற்றியது தங்களை மிகவும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற மாநிலத்தவர்களும்கூட இதனால் பாதிக்கப்படுவதாகக் கூறி இருக்கின்றனர்.

வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட்ட இந்தியை இங்கே மீண்டும் திணிப்பதற்குப் புதிதாகச் சிலர் புறப்பட்டு இருக்கின்றார்கள். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற கவைக்கு உதவாத, உண்மை இல்லாத வாதத்தை வைக்கின்றார்கள்.

தமிழகத்தின் கல்வித்துறையில், நீதி, நிர்வாகத் துறைகளில் தமிழ் முதல் இடம் பெற வேண்டும்; ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம்தான் ஆட்சி மொழி. இங்கு வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தாய்மொழி ஆங்கிலம்தான்.

ஆங்கிலப் படிப்புதான் தமிழகத்து இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

‘திராவிட இயக்கம் நலிந்தது; இனி அழியும்; அதன் சகாப்தம் முடிந்துவிடும்’ என்று சிலரின் ஊளைச்சத்தம் பலமாகக் கேட்கின்றது.

ஒரே மதத்தைப் பின்பற்றிய பாகிஸ்தான், உருது மொழித் திணிப்பால் வங்காள தேசம் என்ற நாட்டை உருவாக்கிற்று. ஒரே மதத்தைப் பின்பற்றுகின்ற எண்ணற்ற சின்னஞ்சிறு நாடுகள் மொழி ஆதிக்கத்தால் தனித்தனி நாடுகளாக ஆகிவிட்டன. அயர்லாந்து தனி நாடாக ஆனதற்குக் காரணமே மொழித்திணிப்புதான்.

‘தமிழ்நாட்டில் கோட்டைக் கதவுகள் இல்லை; திறந்து கிடக்கின்றது; கேள்வி கேட்பார் இல்லை; உள்ளே நுழைந்துவிடலாம்; இந்து ராஷ்டிரத்தை நிறுவிடலாம்’ என்று திட்டம் வகுப்பவர்களின் பகல் கனவு பலிக்கhது.

மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிடாவிடில், கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன்” – இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.