பணத்தை தராத அம்பானியை கைது செய்ய பன்னாட்டு நிறுவனம் கோரிக்கை

டில்லி

ரூ.550 கோடி பணத்தை தராத அம்பானியை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு எரிக்சன் நிறுவம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

அனில் அம்பானியின் ஆர் காம் எனப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எரிக்சன் நிறுவனம் மொபைல்களை விற்பனை செய்து வந்தது. அந்த வகையில் ஆர் காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி பாக்கி வைத்துள்ளது. இது குறித்து பல முறை எரிக்சன் நிறுவனம் நினைவூட்டியும் ஆர் காம் பணத்தை அளிக்கவில்லை.

அதை ஒட்டி எரிக்சன் நிறுவனம் ஆர் காம் நிறுவன அதிபர் அனில் அம்பானி மற்றும் நிறுவனத் தலைவர் சதீஷ் சேத் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டிய ரூ.1500 கோடியில் உடனடியாக ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் ரிலையன்ஸ் பணத்தை தரவில்லை.

அதை ஒட்டி எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வழக்கிய தீர்ப்பில் அதே வருடம் செப்டம்பர் மாதக் கடைசிக்குள் ரூ.550 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அப்போதும் ரிலையன்ஸ் திருப்பி தரவில்லை.

அதை ஒட்டி மீண்டும் மேல் முறையீடு செய்த போது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று பணத்தை திருப்பித் தர கடைசி கெடு விதித்து தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இது வரை ரிலையன்ஸ் நிறுவனம் பணத்தை அளிக்காமல் உள்ளது.

இதை ஒட்டி எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், “உச்சநீதிமன்றம் கொடுத்த கடைசி கெடுவான டிசம்பர் 15 ஆம் தேதி முடிந்தும் இன்று வரை ரிலையன்ஸ் நிறுவனம் பணம் அளிக்கவில்லை ஆகவே ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி, அதன் தலைவர் சுனில் சேத் ஆகியோரை கைது செய்து சிவில் சிறையில் அடைக்க வேண்டும்.” என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சிவில் சிறையில் பணம் செலுத்தாமல் ஏமாற்றுவோர் தண்டனை பெறாத நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் அடைத்து வைக்க முடியும். அந்த சிறையில் உள்ளவர்களுக்கான செலவை கோரிக்கை விடுப்பவர் செலுத்த வேண்டும். இது தண்டனை இல்லாத ஒரு சிறைக்காவல் ஆகும்.