கடனாளியான அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கக் கோரி மனு

டில்லி

னில் அம்பானியை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கக் கோரி பிரபல தொலை தொடர்பு சாதன நிறுவனமான எரிக்சன் மனு அளித்துள்ளது.

பிரபல தொழில் அதிபரான அனில் அம்பானி நடத்தி வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்  கடுமையான நஷ்டத்துக்குள்ளானது.    இதன் காரணமாக இந்த குழுமத்துக்கு ரூ.45000 கோடி வரை கடன் ஆனது.    அதை திருப்பித் தர முடியாத நிலையில் அனில் அம்பானி இருந்தார்.

இந்நிலையில் அவர் சகோதரரும் ஜியோ அதிபருமான முகேஷ் அம்பானி  ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம்,  மொபைல் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ரூ.25000 கோடிக்கு வாங்க ஒப்புக் கொண்டார்.   ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு முன்பு ரிலையன்ஸ் உபயோகித்த ஸ்பெக்ட்ரம் கட்டணமான ரூ.2900 க்கான வங்கி ஈட்டை தொலை தொடர்பு அமைச்சகம் கேட்டதால் ஒப்பந்தம் நிறைவேறவில்லை.

பிரபல  ஸ்வீடிஷ் தொலை தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான எரிக்சன் நிறுவனத்துடன் செய்து வந்த வர்த்தகத்தில் அனில் அம்பானி ரூ. 1600 கோடி தர வேண்டி இருந்தது.    அதன் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி முதல் தவணையாக ரூ. 590 கோடி பெற்றுக் கொள்ள எரிக்சன் ஒப்புக் கொண்டது.   அந்த தொகையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் எரிக்சனுக்கு செலுத்த வேண்டும் என அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜியோவுடனான ஒபந்தம் முடிவடையாததால் அனில் அம்பானிக்கு கெடு தேதிக்குள் எரிக்சனுக்கு பணம் அளிக்க முடியவில்லை.  இதை ஒட்டி அனில் அம்பானி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க எரிக்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.   அதன் முதல் கட்டமாக அனில் அம்பானி நாட்டை விட்டு செல்ல தடை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் மனு அளிக்க உத்தேசித்தது.

இதை ஒட்டி எரிக்சன் உச்ச்நீதிமன்றத்தில், ”நீதிமன்ற உத்தரவை ரிலையன்ஸ் குழுமத்தினர் மதிக்காமல் நடந்துக் கொள்கின்றனர்.   அதனால் நாங்கள் அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்.  எனவே அந்த நிறுவன  நிர்வாகிகள், மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என மனு அளித்துள்ளது.