சென்னை: ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீட்டு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அப்பகுதியின் மஞ்சள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மட்டுமே, ‘ஈரோடு மஞ்சள்’ என்ற அந்தப் புகழ்பெற்ற வேளாண் பொருளின் மீது உரிமை கொண்டாட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு, கடந்த 2013ம் ஆண்டு, தங்கள் பகுதியின் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வேண்டி, இந்திய புவிசார் குறியீட்டுப் பதிவகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த விண்ணப்பத்தில், “ஈரோடு மஞ்சள் என்பது உலகளவில் பிரசித்தமான ஒன்று. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான கொடுமுடி, சிவகிரி, கோபிசெட்டிப் பாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி உள்ளிட்டவை இந்த மஞ்சள் உற்பத்திக்கு மிகவும் உகந்தவை” என்பன போன்ற பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

மஞ்சள் என்பது உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. தமிழர்களின் பண்டைய காலமான சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் காலத்திலேயே, மஞ்சள் வணிகம் சிறப்பாக நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன.

சின்ன நாடன் மற்றும் பெரும் நாடன் ஆகிய இரண்டு முக்கிய வகைகள் மஞ்சளில் உண்டு. இவற்றில், சின்ன நாடன் வகைதான் ஈரோட்டு விவசாயிகளால் விளைவிக்கப்படுகிறது.

– மதுரை மாயாண்டி