Random image

தப்பித்தது தமிழகம்: ஆந்திராவுக்கு நகர்ந்தது தாழ்வு மண்டலம்

18-1463582081-balachandran

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திர கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால்  தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் இரவு முழுவதும் பெய்தது

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. . நெல்லூருக்கு கிழக்கே 140 கி.மீ தொலைவில் அது மையம் கொண்டிருக்கிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. . மேலும், அது வடக்கு மற்றும் வடகிழக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டதால்  தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.

ஆனாலும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு.  சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூவிருந்தமல்லி, சோழவரத்தில் 7 செ.மீட்டரும், தாமரைப்பாக்கம், செங்குன்றத்தில் 6 செ.மீட்டரும் பொன்னேரியில் 4 செ.மீட்டரும், சென்னை நகரில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

வட தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்” – இவ்வாறு ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.