சிற்பபுக்கட்டுரை: பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
சினிமாவில் மக்களால் பெருவாரியாக ரசிக்கப்படும் காதலும் சரி. என்கவுன்ட்டரும் சரி.. நிஜத்தில் மக்களுக்கு நெருடலாகவே இருக்கும். நாட்டை உலுக்கியிருக்கும் இந்த லேட்டஸ்ட் என்கவுன்ட்டரும் அதே ரகம்தான்.
1
மத்தியபிரதேசம் போபால் சிறையிலிருந்து சிமி இயக்கத்தை சேர்ந்த 8 விசாரணை கைதிகள் காவலர் ஒருவரை கொன்றுவிட்டு தப்பிபோடியுள்ளனர். அவர்களை தேடிப்போனபோது நடந்த மோதலில் எட்டுபேரையுமே சுட்டுக்கொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்கிறது போலீஸ். வழக்கம்போல போலீஸ் தரப்புக்கு எதிராய் பெரிய அளவில் சந்தேகக்கணைகள் பாய ஆரம்பித்துள்ளன.
படுக்கைவிரிப்புகளை கயிறுபோல் திரித்து, அதில் உருட்டுக்கட்டைக்கொண்டு ஏணிபோல் தயாரித்து கைதிகள் தப்பியோடினார்கள். விடியற்காலை மூன்று மணிக்கு தப்பிய அவர்களை காலை 11 மணியளவில் அருகிலுள்ள கிராமப்பகுதியில் சுற்றிவளைத்தோம். எங்களை நோக்கி சுட்டதால் வேறுவழியில்லாமல் போய்விட்டது’’ என்று காவல்துறை தலைமை சொல்லியது. ஆனால் மாநில உள்துறை அமைச்சரோ, கைதிகளிடம் துப்பாக்கிகள் இல்லை என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதுபோதாதென்று ‘மோதல்’ இடத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லி வெளியான வீடியோக்கள் சர்ச்சையைத்தான் ஏற்படுத்துகின்றன. கைதிகள் புதிய ஸ்போர்ட் ஷுக்கள், வாட்ச் போன்றவற்றை அணிந்திருக்கின்றனர். அது அவர்களுக்கு எப்படி கிடைத்தது? கைதிகள் மிகமிக அருகில் இருக்கும் நிலையிலேயே போலீசார் சுடுகின்றனர். உயிரோடு பிடிக்கும் வாய்ப்பை ஏன் அவர்கள் தவிர்த்தார்கள்?
‘என்கவுன்ட்டர்’ எந்த அளவுக்கு உண்மையோ, ஆனால் கைதிகள் எட்டு பேரும் தங்களுக்கு தீராத தலைவலி என்றே போலீசார் நினைத்து வந்துள்ளனர்.அவர்கள் மீதான வழக்கும், பழைய சம்பவங்களும் அப்படித்தான் காட்டுகின்றன.
பலியான எட்டுபேரில் மூன்றுபேர், 2013-ஆம் ஆண்டும் சிறையில் இருந்து தப்பியோடி பின்னர் பிடிபட்டவர்கள். இரண்டுபேர் சென்னையில் 2014 மே ஒன்றாம் தேதி, பெங்களுர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் எஞ்சினியர் பலியான குண்டுவெடிப்பு சம்பவத்தில், தொடர்புடையவர்கள். அதற்கு முன்பு தெலுங்கானாவில் வங்கியில் புகுந்து 46 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள் என்ற வழக்கும் அவர்கள் மீது உண்டு.
2
சிறைகளை உடைத்து தப்புவது, தீவிரவாத பயற்சி முகாம் நடத்துவது அகமதாபாத், சூரத் என பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது, மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது சுசீல்குமார் ஷிண்டேவை அவரது மகளுடன் சேர்த்து கொல்ல முயன்றது என 8 கைதிகள் மீதான வழக்கு ஒவ்வொன்றும் சாதாரண ரகமாகவே இல்லை.
அதனால்தான், போலீசார் சொல்லும் என்கவுண்ட்டர் சம்பவமும் தற்செயலாக நடந்தது போல் தெரியவில்லை.
நாட்டின் முக்கிய கட்சிகள் நீதி விசாரணை வேண்டும் என்று போர்க்கொடி தூக்க, ம.பி.முதலமைச்சர் சிவராஜ் சௌகானோ, விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பான ‘நியா’விடம் மாற்றிவிட்டிருக்கிறார்.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் முஸ்லீம்கள். நடந்திருப்பதோ, பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில்.. இது என்னென்ன பரிமாணகங்களை காணப்போகிறதோ?
15 நாட்களுக்கு முன்பு பாட்னா சிறையில் இருந்து 12 விசாரணை கைதிகளின் தப்பிக்கும் முயற்சி சிறையிலேயே முடிக்கப்பட்டது..இல்லாவிட்டால் போபாலுக்கு முன்பு பாட்னாதான் அலறியிருக்குமோ என்ற கேள்விக்குறியும் எழாமல் இல்லை…
இதுபோல என்கவுன்ட்டர்களை கேள்விப்படும்போது. ‘’எவ்வளவு ஹைசெக்யூரிட்டி ஜெயிலாக இருந்தாலும் எங்களால் தப்பமுடியும்’’ என்ற கைதிகள் தரப்புக்கும், ‘’நீங்கள் எப்படித்தப்பித்தாலும் அடுத்த சில மணிநேரத்திலேயே உங்களை தேடிப்பிடித்து பிணமாக்கிவிடுவோம்’’ என்று போலீஸ்தரப்பும் உறுமுவது மட்டும் ஒரு கோணத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.